தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 10 வார்டுகள் உள்ளன. கடந்த ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. 7 வார்டுகளையும், தி.மு.க. 2 வார்டுகளையும், அ.ம.மு.க. ஒரு வார்டிலும் வெற்றிபெற்றது. இந்த நிலையில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 7ஆக இருந்ததால், உத்தமபாளையம் ஒன்றியக்குழு தலைவர் பதவியை அக்கட்சி கைப்பற்றியது. இதையடுத்து அ.தி.மு.க.வை சேர்ந்த ஜான்சி வாஞ்சிநாதன் ஒன்றியக்குழு தலைவராகவும், மூக்கம்மாள் கெப்புராஜ் துணைத்தலைவராகவும் பதவியேற்றனர். இதற்கிடையே அ.தி.மு.க.வை சேர்ந்த 3 கவுன்சிலர்களும், அ.ம.மு.க.வை சேர்ந்த ஒரு கவுன்சிலரும் தி.மு.க.வில் சேர்ந்தனர்.
இதன்மூலம் தி.மு.க. கவுன்சிலர்களின் பலம் 6 ஆக உயர்ந்தது. அ.தி.மு.க. பலம் 4ஆக குறைந்தது. இதனால் தலைவர் பதவியில் இருந்து ஜான்சி வாஞ்சிநாதன் ராஜினாமா செய்தார். இதையடுத்து துணைத்தலைவர் மூக்கம்மாள் கெப்புராஜ் பொறுப்பு தலைவராக செயல்பட்டு வந்தார். இந்தநிலையில் காலியாக இருந்த தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல், ஒன்றிய அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. தேர்தல் அதிகாரியாக தேனி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தாமரைக்கண்ணன் செயல்பட்டார். இந்த தேர்தலில் தி.மு.க கவுன்சிலர்கள் 6 பேர் கலந்துகொண்டனர். துணைத்தலைவர் மூக்கம்மாள் கெப்புராஜ் உள்பட அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 3 பேர் வந்தனர்.
ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடந்த திமுக பிரமுகர் பிறந்த நாள் விழா; சர்ச்சை குறித்து விசாரிக்க முடிவு!
சிறிது நேரத்தில் அவர்கள் 3 பேரும் தேர்தலை புறக்கணிக்கிறோம் என்று கூறி, கூட்டரங்கை விட்டு வெளியில் சென்றனர். அதேபோல் அ.தி.மு.க. முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ஜான்சி வாஞ்சிநாதன் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. பின்னர் நடைபெற்ற தேர்தலில் தி.மு.க. கவுன்சிலர் இன்பென்ட் பனிமய ஜெப்ரின் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்தார். மற்றவர்கள் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதன்மூலம் இன்பென்ட் பனிமய ஜெப்ரின் போட்டியின்றி ஒன்றியக்குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் அவர் பதவியேற்றுக்கொண்டார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்