தலைவர் அவர்தான் , ஆனால் அதிகாரம் எனக்கு

 

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல்களில் பெண் கவுன்சிலர்கள், பெண் தலைவர்கள், துணைத் தலைவர்கள் பலர் வெற்றிபெற்றனர். ஆனால் பெண் கவுன்சிலர்கள், பெண் தலைவர்கள், அந்த கவுன்சிலருக்கான பணிகளை செய்யாமல், அவர்களின் வீட்டு ஆண்கள் பெண் கவுன்சிலர் மற்றும் பெண் தலைவர்கள் காண  பணியை செய்வதாக புகார் எழுந்த வண்ணம் உள்ளன.  காலம் காலமாக இந்தப் புகாரைத் தொடர்ந்து இருந்து வந்தாலும் இம்முறை இந்த புகார் பூதாகரமாக வெடித்தது.



 

வைரல் வீடியோக்கள்

 

குறிப்பாக சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் பெண் கவுன்சிலர்களின் உறவினர்கள் என கூறிக்கொண்டு கடைகளில் மாமூல் வசூலித்த சிலரின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில வைரலாக பரவியது. உடனடியாக இது குறித்து ஆளும் கட்சியாக இருக்கும் திமுகவின் தலைமை, கருத்தில் எடுத்துக் கொண்டு, பெண்கள் வெற்றி பெற்றுள்ள ஊராட்சி பிரதிநிதிகள் பதிவுகளை அவர்களுடைய உறவினர்கள் எக்காரணம் கொண்டும் பயன்படுத்தக் கூடாது அவ்வாறு மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து தமிழக முதல்வர் மற்றும் மகளிரணி செயலாளர் கனிமொழி ஆகியோர் அறிவுரை மற்றும் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

 



 

காட்டாங்கொளத்தூரில்..

 

தமிழக முதலமைச்சர் எச்சரிக்கை விடுத்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கீரப்பாக்கம் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் செல்வசுந்தரியின் கணவர் ராஜேந்திரன் ஆதிக்கம் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. ராஜேந்திரன் திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்தவர்  என்பது குறிப்பிடத்தக்கது.     

 



இந்நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் செல்வசுந்தரியின் கணவர் ராஜேந்திரனின் பிறந்தநாள் விழாவை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர் என புகார் எழுந்தது. அவர் எந்த ஊராட்சியோ பதவியிலும் இல்லாத நிலையில் அரசு அலுவலகத்தில் பிறந்த நாள் விழா கொண்டாடியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வீடியோக்களும் வெளியாகி உள்ளன. இதுகுறித்த வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. 

 

 

நடவடிக்கைதான் என்ன

 

இதுகுறித்து காட்டாங்குளத்தூர் ஊரக வளர்ச்சி அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, இதுகுறித்த தகவல் தமக்கு இப்போதுதான் தெரிய வந்திருப்பதாகவும், ஒருவேளை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பிறந்தநாள் கொண்டாடி இருந்தால், அது குறித்து விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.