கடந்த 2008ஆம் ஆண்டு ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு பிணையில் வெளி வந்தபோது தலைமறைவான மாவோயிஸ்ட் யோகேஷ் மதனை 13 ஆண்டுகளுக்கு பின் தமிழக கியூ பிராஞ்ச் போலீசார் கைது செய்து தேனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். மேலும் யோகேஷ் மதனை காவலில் எடுத்து விசாரிக்கவும் க்யூ பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வருஷநாடு மலைப்பகுதியில் கடந்த 2008ஆம் ஆண்டு ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்டதாக நக்சல் மற்றும் மாவோயிஸ்ட் அமைப்புகளை சேர்ந்த மகாலிங்கம், முருகானந்தம், பாலமுருகன், யோகேஷ் மதன் மருது ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் மகாலிங்கம் தற்போது மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மருது, பாலமுருகன், முருகானந்தம் ஆகியோர் பிணையில் வெளி வந்துள்ளனர். அந்த வரிசையில் கடந்த 2008ஆம் ஆண்டு பிணையில் வெளிவந்த யோகேஷ் மதன் தலைமறைவான நிலையில் கடந்த 13 ஆண்டுகளாக கியூ பிரிவு காவல்துறையினர் தேடி வந்தனர்.
இந்நிலையில் யோகேஷ் மாதவன் மகாராஷ்டிராவில் பதுங்கியிருப்பதாக தமிழக கியூ பிரான்ச் போலீசாருக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து தமிழக கியூ பிரிவு காவல்துறையினர் மகாராஷ்டிரா சென்று யோகேஷ் மதனை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட யோகேஷ் மதன் தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் மேஜிஸ்ட்ரேட் ரமேஷ் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்க காவல்துறையினர் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.
கைது செய்யப்பட்ட ரமேசை காவலில் எடுத்து விசாரிக்க கியூ பிராஞ்ச் போலீசார் முடிவு செய்துள்ளனர். விசாரணைக்கு பின் பல்வேறு புதிய தகவல்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மத்திய பிரதேச மாநிலத்தில் யோகேஷ் மதன் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கியூ பிரிவு காவல்துறையினர் தெரிவித்தனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்