ப்ரியம்... ஒன்று தான் மாறாதது...! அது யார் மீது, யார் வைத்த ப்ரியம் என்பதில் இருந்து, எது மாதிரியான ப்ரியம் என்பது வரை அலாதியானது. அப்படி ஒரு ப்ரியம் தான், நாய்க்கு வளைகாப்பு நடத்தும் அளவிற்கு ஒரு குடும்பத்தை தூண்டியுள்ளது. 

 

மதுரை ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் சக்திவேல். இவர் செல்லப்பிராணிகள் மீது அளவுக்கதிகமான அன்பு கொண்டவர் இதனையடுத்து தான் வளர்த்து வந்த  சுஜி என்ற பெண் நாய் கர்ப்பம் தரித்ததை அடுத்து தன் குடும்பத்தாருடன் இணைந்து நாய்க்கு வளைகாப்பு நடத்துவது என முடிவு செய்தார். அதன் அடிப்படையில்  தனது செல்லப் பிராணியான சுஜிக்கு ஐந்து வகையான உணவுகளை தயார் செய்து  மாலை அணிவித்து வளைகாப்பு நடத்தி முடித்தார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் செல்லப்பிராணியின் மீது காவல் உதவி ஆய்வாளா சக்திவேலுக்கு, வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.



இது குறித்து சக்திவேல் குடும்பத்தினர் கூறுகையில், “சுஜி எங்கள் வீட்டு செல்லப்பிள்ளை. இதனை நாய்குட்டியா மட்டும் பார்க்காமல் எங்கள் வீட்டில் ஒரு உறவாக பார்க்கிறோம். நாங்கள் எவ்வளவு அன்பு செலுத்துகிறோமோ, அதை விட பன்மடங்கு அன்பை எங்களுக்கு திருப்பி செலுத்தி வருகிறது. அதனால் அதற்கு பிடித்த உணவை தான் வழங்குவோம். அதற்கும் கோபம், சந்தோஷம் என உணர்ச்சிகள் உள்ளது. அதை எங்களுக்கு எப்போது உணர்த்திக் கொண்டே இருக்கும். இப்படி இருக்கையில் தான் சுஜி கர்ப்பாக இருந்தது தெரியவந்தது. இதனால் எங்கள் சுஜிக்கு வளைகாப்பு செய்ய முடிவு செய்தோம். அதனால் அதற்கு மாலை, வளையில், திலகம் இட்டு வளைகாப்பு கொண்டாடினோம்.





அதற்கு பிடித்த உணவுகளை கொடுத்து மகிழ்வித்தோம். அதற்கு வளைகாப்பு நிகழ்ச்சி பற்றி தெரிந்திருக்காது என்றாலும் எதோ ஒரு மகிழ்ச்சியை உணர்ந்திருக்கும்.  அந்த மகிழ்ச்சியை நாங்களும் எங்கள் அக்கம், பக்கத்தினர் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொண்டோம்” என தெரிவித்தனர்.




சமீப காலமாக நாய் உள்ளிட்ட செல்லப்பிராணிகளுக்கு வளைகாப்பு கொண்டாடும் நிகழ்ச்சி அதிகளவு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரையில் காவல்துறையை சேர்ந்த சக்திவேல் தனது நாய்குட்டிக்கு வளைகாப்பு கொண்டாடியது. பலரையும் பேசவைத்துள்ளது. இந்நிலையில் மதுரை இளைஞர்கள் சிலர் மதுரைக் காரங்க பாசம் வேற ரகமா இருக்கும் என இந்த வளைகாப்பு நிகழ்ச்சி குறித்து சமூக வளைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.