அட்சய திருதியையொட்டி தேனி மாவட்டத்தில் குழந்தை திருமணம் நடக்காமல் தடுக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டுள்ளனர். தமிழகத்தில் குழந்தை திருமணம் அதிக அளவில் நடக்கும் மாவட்டங்களில் முதன்மை மாவட்டமாக தேனி திகழ்கிறது. அதில் பல திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்ட போதிலும், வெளியே தெரியாமல் பல திருமணங்கள் நடக்கின்றன. அவ்வாறு திருமணமாகும் சிறுமிகள் பிரசவத்துக்கு அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட பின்னரே இந்த விவகாரம் வெளியே தெரிய வருகின்றன.
தஞ்சை தேர் திருவிழாவில் சோகம்: மின்சாரம் பாய்ந்து 11 பேர் உயிரிழப்பு!
குறிப்பாக கடந்த கால கட்டங்களில் முக்கிய பண்டிகை காலங்கள் மற்றும் அட்சய திருதியை பண்டிகை காலகட்டத்தில் அதிக எண்ணிக்கையில் குழந்தை திருமண ஏற்பாடுகள் நடந்ததாக கூறப்படுகிறது. இதனால், வரும் மே மாதம் 3ஆம் தேதி வரவுள்ள அட்சய திருதியை பண்டிகையையொட்டி குழந்தை திருமணத்தை தடுக்கும் பொருட்டு பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட சமூக பாதுகாப்பு அலுவலர், மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை துணை இயக்குனர், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர், தொழிலாளர் உதவி ஆணையர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், சைல்டு லைன் இயக்குனர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த குழுவின் மூலம் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான முன்திட்டமிடல் குறித்த கூட்டம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் இந்த குழுவில் இடம் பெற்றுள்ள துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில், அட்சய திருதியை பண்டிகையையொட்டி வருகிற 3 ஆம் தேதி வரை கிராம ஊராட்சி, வட்டாரம் மற்றும் நகர அளவில் குழந்தை திருமணம் தடுத்தல் தொடர்பான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்துதல், பள்ளி இடையின்ற மாணவிகளை கண்டறிந்து அவர்களின் பெற்றோருக்கு ஆலோசனை வழங்குதல், முக்கிய இடங்களில் விழிப்புணர்வு பதாகைகள் வைத்தல், வாகனங்களில் ஒலிபெருக்கி மூலம் பிரசாரம் செய்தல், பள்ளிகளில் காலை வழிபாட்டு கூட்டத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மே ஒன்றாம் தேதி நடக்கும் கிராமசபை கூட்டத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற தொடர் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது.