தமிழக, கேரள மாநில எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாக இந்த அணை திகழ்கிறது. இந்த அணையின் மொத்த நீர்மட்டம் 152 அடி. அணையை பலப்படுத்தும் பணிக்காக கடந்த 1979 ஆம் ஆண்டு நீர்மட்டம் 136 அடியாக குறைக்கப்பட்டது. பின்னர் தமிழக அரசு பல்வேறு சட்டப் போராட்டங்கள் நடத்தியதால், அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக்கொள்ளவும், பேபி அணையை பலப்படுத்திவிட்டு நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்திக்கொள்ளவும் உச்சநீதிமன்றம் கடந்த 2014-ம் ஆண்டு உத்தரவிட்டது.


திண்டுக்கல் : ‘விநோத நோயால் பாதிக்கப்பட்ட 10 வயது சிறுவன்’ உயிரை காப்பாற்ற முதல்வருக்கு பெற்றோர் கண்ணீர் மல்க கோரிக்கை..!




உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட அதே ஆண்டு நீர்மட்டம் 142 அடியை எட்டியது. தொடர்ந்து 2015-ம் ஆண்டும், 2018-ம் ஆண்டும் நீர்மட்டம் 142 அடியை எட்டியது. அதனை தொடர்ந்து  மற்ற ஆண்டுகளில் பருவமழை போதிய அளவில் கைகொடுக்காததால் நீர்மட்டம் 142 அடியை எட்டவில்லை. இதனை தொடர்ந்து சென்ற ஆண்டு அணையின் நீர் மட்டம் 4வது முறையாக 142 அடியை எட்டியது. இதே போல் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை என இரு பருவமழை காலத்திலும் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தது. இதனால், அணையின் நீர்மட்டம் உயர்ந்தது.  மத்திய நீர்வள ஆணையம் பரிந்துரை செய்த 'ரூல் கர்வ்' அடிப்படையில் தான் பருவகாலத்துக்கு ஏற்ப அணையில் தண்ணீர் தேக்கி வைக்க வேண்டும். மத்திய நீர்வள ஆணைய அமலாக்கத்தின் ரூல்கர்வ் முறைப்படி, இந்த மாதம் (டிசம்பர்) முதல் அடுத்த ஆண்டு மே 31-ந்தேதி வரை முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரை தேக்கிக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.


Corona: இன்று நாடு முழுவதும் கொரோனா தடுப்பு ஒத்திகை... தயார் நிலையில் மருத்துவமனைகள்..!


கடந்த சில தினங்களுக்கு முன்பு அணையின் நீர்மட்டம் 141 அடியை எட்டியதால், தமிழக பொதுப்பணித்துறையினர், கேரள மாநிலம் வல்லக்கடவு, சப்பாத்து உள்ளிட்ட பகுதி மக்களுக்கு 2-வது வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி தற்போது 5-வது முறையாக அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியுள்ளது. இதையடுத்து இன்று காலை 10 மணி அளவில் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்துக்கு இறுதிகட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.




அணையின் நீர்மட்டம் 142 அடியாக எட்டியதால் தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது தேனி மாவட்டத்தில் விவசாய பணிகளுக்கு போக அதிக அளவில் தண்ணீர் வைகை அணைக்கு செல்கிறது. அங்கிருந்து உபரிநீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. எனவே முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை தொடர்ந்து 142 அடியாக நிலை நிறுத்தி வைக்க வேண்டும் என்பதும், பேபி அணையை பலப்படுத்தும் பணியை துரிதமாக மேற்கொண்டு நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் 5 மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.




ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூப்பில் வீடியோக்களை காண