சீனாவில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு வந்த 6 வயது குழந்தை, அவரது தாய்க்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்திருப்பதை அடுத்து உலக நாடுகள் தீவிர தடுப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளது. புதிய வகை கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவியுள்ள நிலையில், மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் கொரோனா பரிசோதனை கட்டாயம் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் கூறியிருந்தார்.

 

அதன்படி சுகாதாரத்துறை அறிவுறுத்தலின்படி கொரோனா பி.எப் 7 தொற்று குறித்து கடந்த மூன்று நாட்களாக மதுரை விமான நிலையத்தில் பரிசோதனை நடைபெற்று வருகிறது.  இந்த நிலையில் சீனாவில் இருந்து இலங்கை வழியாக விமானம் மூலம் மதுரை வந்த ஆறு வயது மகள் மற்றும் தாய் இருவருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது.




 

இலங்கையில் இருந்து இந்தியா வந்த ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் விமானத்தில் 70 பயணிகள் மதுரை வந்தனர். அப்போது சீனாவில் இருந்து இலங்கை மூலம் மதுரை வந்த பயணிகளிடம் கொரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் மதுரை வந்த பிரதீபா (வயது 39) என்ற பெண் பயணிக்கும், அவரது 6 வயது மகள் பிரித்தியங்கார ரிகாவுக்கும் நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

 

இதனை தொடர்ந்து தற்போது விருதுநகர் மாவட்டம் இலந்தைகுளம் பகுதியில் தங்கியுள்ள பிரதீபா மற்றும் மகள் பிரித்தியங்கார ரிகாவை சுகாதாரத்துறை அதிகாரிகள் 15 நாட்கள் தனிமைபடுத்தியுள்ளனர்.



இவரது கணவர் சுப்பிரமணியம் சீனாவில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருடன் மனைவி மற்றும் குழந்தையும் சேர்ந்து இருந்துள்ளனர். தற்போது சுப்பிரமணியம் வேலைக்காக ஜெர்மனி சென்றுள்ளார். இதனால் குடும்பத்தினர் தமிழகம் திரும்பிய நிலையில் இருவருக்கும் கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

 

இதனை தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் கூடுதல் கண்காணிப்பு மற்றும் தீவிர பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இவர்களுடன் இலங்கை விமானத்தில் வந்த 70 பயணிகளுக்கும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.