மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ளது குட்லாடம்பட்டி. இதன் வடக்கே சிறுமலை அடிவாரத்தில் அருவி ஒன்று அமைந்துள்ளது. மழை காலங்களில் இந்த அருவியில் நீர் அதிகளவு கொட்டும். இதனால் சீசன் சமயத்தில் சுற்றுலா பயணிகள் ஏராளமான அளவில் இங்கு குவிகின்றனர். தற்போது காவல்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது. இவ்வாறு பசுமையான சுற்றுச்சூழலுடன் பல்வேறு சிறப்பு கோயில்கள் இப்பகுதியில் உள்ளன.
இந்நிலையில் குட்லாடம்பட்டி பகுதியில் அமைந்துள்ள அண்ணாமலையார் கோயிலில் நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள் கோயிலின் பூட்டை உடைத்து அங்குள்ள பழமைவாய்ந்த நடராஜர் சிலை, சிவகாமி சிலை, மாணிக்கவாசகர் சிலை உள்ளிட்ட மூன்று ஐம்பொன் சிலைகளை திருடிச் சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குட்லாடம்பட்டி அண்ணாமலையார் கோயிலில் கடந்த திங்கள் அன்று இரவு 8 மணிக்கு கோயில் நிறுவனர் பூஜைகளை முடித்து சென்றுள்ளார். மறுநாள் கோயிலில் வழக்கம்போல் பூஜகர் கோயிலை திறந்து பார்த்தபோது கோயிலில் சிலைகள் காணாமல் போனது, தெரியவந்துள்ளது. இதை கண்ட பூஜகர் அதிர்ந்து போனார். உடனடியாக கோயில் நிர்வாகத்திற்கு தெரிவித்த பின்னர், சிலைகள் திருட்டு குறித்து வாடிப்பட்டி காவல்துறைக்கு தவகல் கொடுத்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சிலை திருட்டு தடுப்பு பிரிவு ஏ.டி.எஸ்.பி மலைச்சாமி தலைமையிலான போலீசார் அண்ணாமலையார் கோயிலில் விசாரணை மேற்கொண்டனர். மேலும் குற்றவாளிகள் தப்பிச் சென்ற கோயில் பின்புறம் உள்ள வயல்வெளிகள், காட்டுப்பகுதியை பார்வையிட்டனர். பின்னர் கோவிலில் அமைந்துள்ள சி.சி.டி.வி கேமரா காட்சிகளை கைப்பற்றி அதில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் சிலை திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
இது குறித்து காவல்துறையினர் சிலர்...," இரவு 11 மணிக்கு கோயில் காம்பவுண்டு சுவர் எறி குதித்த கொள்ளையர்கள் சுவாமி சிலையை திருடியுள்ளனர். ஊருக்குள் பல இடங்களில் கண்காணிப்பு கேமரா இருப்பது தெரிந்து வயல் வழியாக கடத்தி சென்றுள்ளனர். எனினும் கோயில் சி.சி.டி.வி காட்சிகளை வைத்து விசாரணை நடத்திவருகிறோம். விரைவில் குற்றவாளிகளை கைது செய்வோம். வாடிப்பட்டி சுற்றுவட்டாரங்களில் மார்கழி உள்ளிட்ட, குளிர் சமயத்தில் பல்வேறு திருட்டு சம்பவங்கள் நடைபெறும். குளிர்காலத்தில் பொதுமக்கள் வெளியே வரமாட்டார்கள் என்று திட்ட மிட்டு கோயில் பொருட்கள் மற்றும் ரேடியோ செட்டுகளை திருடி வந்தனர்.
அதற்காக தனிப்படை அமைந்து, கொள்ளையர்களை பிடித்தோம். தற்போது சில மர்ம கும்பல் அண்ணாமலையார் கோயில் சிலையை திருடியுள்ளனர். எங்களிடம் சில முக்கிய ஆதரங்கள் உள்ளதால் அதன் அடிப்படியில் விசாரணை நடத்திவருகிறோம். குற்றவாளிகளை கைது செய்த பின்னர் தகவல் அளிக்கிறோம்” என்றனர்.
இதை மிஸ் பண்ணாதீங்க பாஸ் -''பரீட்சை அட்டையில கூட தாளம் தான் போடுவேன்'' - பறை இசைக்கலைஞர் வேலு ஆசான் கலகல !