கொரோனா இரண்டாவது அலை சற்று குறைந்துள்ளது என்றாலும் ஊரடங்கு தளர்வு காரணமாக தொற்று எண்ணிக்கை அதிகரிக்கலாம் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துவருகின்றனர். மூன்றாவது அலையின்போது, அதிகமான பாதிப்பு இருக்கலாம் என எச்சரிக்கை அளிக்கப்படுகிறது. கொரோனா நோய் தொற்றுக்கு தடுப்பு மருந்து வந்தாலும் முழுமையாக கொரோனாவை கட்டுப்படுத்தும் என எந்த ஒரு மருந்தும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. கொரோனா நோய்க்கு எதிராக மாஸ்க் அணிதல்,  கிருமி நாசினி பயன்படுத்துதல், சமூக இடைவெளி கடைபிடித்தல் போன்ற முக்கிய விதிகளை அரசு தொடர்ந்து கடைபிடிக்கவேண்டும் என தெரிவிக்கிறது.

 



 

இந்நிலையில் திருச்சி காவல்துறையினர் வாகன தணிக்கை பணியில் இருக்கும்போது, தெப்பக்குளத்தான்கரை பகுதியில் 5 இளைஞர்கள் முகக்கவசம் அணியாமல் ஆட்டோவில் பயணித்ததாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டபோது அந்த இளைஞர்கள் காவல்துறையினரை கீழே தள்ளிவிட்டதோடு, தாக்க முயன்றுள்ளனர். இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமின் வழங்கக்கோரி திருச்சியைச் சேர்ந்த காஜா உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார்.

 

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், " காவல்துறையினர் ஏற்கனவே அதிக அளவிலான மன அழுத்தத்துடன் பணி செய்து வருகின்றனர். கொரோனா அசாதாரண சூழலில் ஒவ்வொருவரும்  உணர்ந்து செயல்படவேண்டும். அதோடு காவல்துறையினர் தங்களது பணிகளைச் செய்கிறார்கள். அவர்கள் கேள்வி எழுப்பும் போது அதற்கு உரிய முறையில் தகவல் கொடுக்கவேண்டும். காவல்துறையை துஷ்பிரயோகம் செய்வது, அச்சுறுத்தல் அடையச் செய்வது ஆகியவற்றை ஏற்கமுடியாது. இந்த கொரோனா நோய்த்தொற்று சூழ்நிலையில், காவல்துறையினர் தங்கள் கடமையைச் செய்யும்போது, அவர்கள் அச்சுறுத்தப்படும் விவகாரங்களில் இந்த நீதிமன்றம் சாதாரணமாக எடுத்துக்கொள்ள போவதில்லை. இந்த வழக்கைப் பொறுத்தவரை மனுதாரர் காவல்துறையினரிடம் நடந்துகொண்ட விதத்துக்கு மன்னிப்புக்கோரி நீதிமன்ற பதிவாளரிடம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவேண்டும்.  பத்தாயிரம் ரூபாயை மதுரை வழக்கறிஞர்கள் எழுத்தர் கூட்டமைப்பிற்கு வழங்கவும் உத்தரவிட்டு வழக்கை ஜூன் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். அதுவரை மனுதாரரை கைது செய்ய இடைக்கால தடைவிதித்தும் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர் .



 

கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் விதிகளை மீறும் நபர்கள் ஏராளம். அவர்களிடம் காவல்துறையினர் முறையாக கேள்வி எழுப்பும்போது, சிலர் தங்களின் அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்களுக்கு எதிராக செயல்பட முயற்சிக்கின்றனர். சென்னை உள்ளிட்ட பல இடங்களில் சிலர், காவலர்களிடம் ஒருமையில் பேசி அவமானப்படுத்தும் செயல்களும் ஆங்காங்கே நடைபெறுகிறது. இது போன்ற செயல்கள் சமூகத்திற்கு தவறான சிந்தனைகளை கற்பிக்கலாம். எனவே கொரோனா காலத்தில் மக்களுக்காக பணிசெய்யும் காவல்துறையினரிடம் பண்பான நடத்தையைப் பின்பற்ற வேண்டும்.