'பறை அடிச்சா பல்லு போன கிழவன் கூட ஆட ஆரம்பிச்சுடுவான். ஆட்டம் போட வீதிக்கு வரவில்லை என்றாலும், மனசுக்குள் ஒரு சின்ன குத்தாட்ட மாச்சும் போடாம இருக்க முடியாது.' என்று பறை இசையின் உணர்வுகளை பெருமையுடன் சொல்லிக் கொண்டிருந்தார் வேலு ஆசான். மதுரை அலங்காநல்லூர் பிரபல தப்பாட்ட கலைஞர் வேலு அவர்களை இந்த லாக்டவுன் சமயத்தில் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. பிசியான தப்பாட்ட கலைஞர் என்றாலும் தன் கலையின் மீது மிகுந்த, நம்பிக்கையும் மரியாதையும் கொண்டவர்.
நம்மிடம்..." என் முழுபேர் வேல்முருகன். ஆனா என்னை வேலு ஆசான்னு சொன்னாதான் எல்லாத்துக்கும் தெரியும். 11-வயதில் பறையை கையில் எடுத்தேன். சேவுகன் வாத்தியார் சொல்லிக்கொடுத்த அடியும், கட்டபாஸ் வாத்தியார் சொல்லிக்கொடுத்த ஆட்டமும், இன்னும் மனசுக்குள்ள நிலையாக நிற்கிறது. எங்க அப்பா ராமையா பறை இசை கலைஞர் என்பதால் எனக்கும் தப்பாட்டம் ரத்தத்தில் ஊறிவிட்டது. இரண்டு வருசத்துக்கு ஒரு முறை கும்பிடும் அலங்காநல்லூர் கோயில் திருவிழாவில் பறை இசைப்பதை பார்த்து எனக்குள் ஆர்வம் வந்து கலையை கற்றுக்கொண்டேன். பள்ளிக்கூடம் போக பிடிக்கல.
பரீட்சை அட்டைய பாத்தாளும் தாளம் தான் போடுவேன். என் நோக்கு எல்லாம் தப்பு மேல தான் இருந்துச்சு. இதனால பள்ளிக்கூடம் போகாம பாதிலேயே நின்னுட்டேன். ஆனால் எங்க வீட்டில் கடுமையா எதிர்ப்பு. நான் பறை அடிப்பது அவங்களுக்கு பிடிக்கல. அதனால என்ன வேற வேலையில் சேர்த்துவிட்டாங்க. எங்க போனாலும் தாளம் போட்ட கை நிற்கவில்லை. அதனால் மீண்டும் பறை அடிக்கவே வந்துட்டேன். குட்டிச்சுவர்ல, இருந்து மரக்கட்டை வரை தாளம் தான் போடுவேன். அது இப்ப என் வாழ்க்கையா மாறிவிட்டது. மதுரை அரசரடியில் நடைபெற்ற மாபெரும் பறை இசை நிகழ்ச்சி எனக்கு தெம்பூட்டியது. அதில் 100 கலைஞர்கள் பறை இசை வாசித்தோம். இப்படி ஏகப்பட்ட வித்தியாசமான பறை இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளேன்.
இதன் விளைவாக மலேசியா, சிங்கப்பூர், ஸ்ரீலங்கா, ஆஸ்திரேலிய உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளிலும். வெளி மாநிலங்களிலும் பறை இசையின் பெருமையை கொண்டு செல்ல முடிந்தது. பெரியார் விருது, ஞானப்பறை விருது, நாட்டுப்புற கலை சுடர் விருது, மக்கள் கலைஞர் விருது, பறை இசை சிற்பி விருது, வீதி விருது, கலைவாணர் என்.எஸ்.கே., விருது, கலைமாமணி பாவலர் முத்துமாரி விருது என 50க்கும் மேற்பட்ட முக்கிய விருதுகள் பெற்றுள்ளேன். ஆனால் அரசு விருதுகளுக்கு நான் எழுதிப்போட்டதில்லை. விருதுகள் திறமைக்கு கிடைக்கவேண்டும். எழுதிப்போட்டு கிடைப்பதில் எனக்கு விரும்பம் இல்லை. பறை இசை என்னை நல்லபடியாக வாழ வைக்கிறது. மானாட..., மயிலாட, ஜெயிக்க போவது யாரு, நீயா? நானா?, என்று சின்னத்திரை நிகழ்ச்சிகளும். கும்கி, சுப்பிரமணியபுரம், குட்டிபுலி, கிடாரி, உருமி என்று பல வெள்ளித்திரையில் சினிமாக்களிலும் என் இசை ஒலித்துள்ளது.
அதுபோக வீரம், என்னை அறிந்தால், தனி ஒருவன், தர்மதுரை, விஸ்வாசம், பேட்டை, மெர்சல், வேலாயுதம் உள்ளிட்ட படங்களில் நேரடியாகவும் திரையிலும் பறை இசை மூலம் வந்துள்ளேன். பறை இசைத் தொழிலில் ஏகப்பட்ட இன்ப, துன்பங்களை சந்தித்துவிட்டேன். ஆனால் பணத்திற்காக என் கொள்கைகளில் இருந்து எப்போதும் மாறியதில்லை. வறுமை வந்தாலும் பறைக்கு உண்டான மரியாதையை வழங்குவேன். பறை இசை மேலும், மேலும் வளரவேண்டும். அதற்கு அரசு தான் நடவடிக்கை எடுக்கவேண்டும். இசைக் கல்லூரியில் மற்ற இசைக்கு தருவது போல் பயிற்சிகளை வழங்கவேண்டும். மிருதங்கத்திற்கு எவ்வாறு ஜதி உள்ளதோ அது போல பறை இசைக்கும் அமைக்கவேண்டும். அதனை சீர்படுத்தி அனைத்து இடங்களுக்கும் ஒரே இசையாக மாற்றவேண்டும். அப்போது தான் பறை இசை அடுத்த கட்டத்திற்கு வளர்ச்சியடையும்" என கோரிக்கை விடுத்தார்.
பறை இசை கலைஞர் வேலு திறமை மிக்க கலைஞராக வலம் வருகிறார். பறை இசையில் தன்னுடைய வாழ்க்கையையும் இணைத்து பயணித்துவரும் இவரை போன்ற உண்மையான பறை இசைசக்கலைஞர்கள் அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றம் அடையவேண்டும் என்றால் பறை இசைக்கான அங்கீகாரம் கிடைக்கவேண்டும்.