தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி வைகை ஆறு செல்லும் வழியில் ஆற்றுக்கு குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை வைகை அணை, இந்த அணை மூலம் மதுரை, திண்டுக்கல் மாவட்டம் ஆகியவற்றிற்கான விவசாய தேவைக்கான நீரையும் ஆண்டிபட்டி மற்றும் மதுரை நகரங்களுக்கு தேவையான குடிநீர் தேவைக்கும் இந்த அணையின் நீரை கொண்டே பயன்படுகிறது. அணையின் மொத்த நீர்பிடிப்பு பகுதியானது 111 அடி உயரம் கொண்டது. இந்த அணையின் நீர்தேக்க பகுதியில் 71 அடி வரை நீரை சேமித்து வைக்க முடியும்.
தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான வருசநாடு, கம்பம், போடி உள்ளிட்ட பகுதிகளிலும், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளான கொட்டக்குடி ஆறு, போடிமெட்டு, குரங்கணி போன்ற மலையடிவார பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதேபோல் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் வைகை அணைக்கு அதிக நீர்வரத்து ஏற்பட்டு உள்ளது. வைகை அணையில் இருந்து ஏற்கனவே மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட முதல் போகம் மற்றும் ஒருபோக பாசனத்திற்காகவும், குடிநீர் தேவைக்காகவும் வினாடிக்கு 1,369 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் அணைக்கு வினாடிக்கு 2,078 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
இவ்வாறு திறக்கப்படும் தண்ணீரின் அளவை விட அணைக்கு கூடுதல் தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் வைகை அணை நீர்மட்டம் சீராக உயர்ந்து வருகிறது. அதன்படி 71 அடி உயரம் கொண்ட வைகை அணை நீர்மட்டம் நேற்று காலை 61.71 அடியில் இருந்து இன்று 62 அடியை எட்டியது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வைகை அணை நீர்மட்டம் மேலும் உயரும் வாய்ப்பு உள்ளது. வைகை அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் தகவல்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்,
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்