ரஜினிகாந்த் விரைவில் குணமடைந்து தமிழ்நாடு மக்களுக்கு நல்ல செய்திகளை சொல்லுவார் என மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்துள்ளார்.

 

செய்தியாளர் சந்திப்பின் போது செல்லூர் கே.ராஜூ பேசுகையில்,” முல்லைப்பெரியாறு அணை திறப்பு உண்மையான நிலவரம் குறித்து அரசு சொல்ல வேண்டும். நீர்வளத்துறை அமைச்சர் வரும் 30ஆம் தேதிக்குள் அணையின் நீர் மட்டத்தை  142 அடியாக உயர்த்துவோம் என கூறியுள்ளார். அ.தி.மு.க அதனை உன்னிப்பாக கவனித்து வருகிறது. கேரளா அரசு 136 அடி மட்டுமே நீரை தேக்கி வைப்போம் என கூறிய போது, அதற்கு எதிராக ஜெயலலிதா ஆர்ப்பாட்டம் நடத்தினார். அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தால் 142 அடியாக உயர்த்துவேன் என ஜெயலலிதா சபதம் செய்து அதனையும் செய்து காட்டினார்.



 

ஆனால் தி.மு.க ஆட்சியில் கேரளாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த வந்த ஜெயலலிதாவுக்கு 19 மிரட்டல் கடிதங்கள் வந்தது. அதனையும் மீறி மதுரை மக்களுக்காக உயிர் போனாலும் போகட்டும் என மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார். அ.தி.மு.க ஆட்சியில் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை ஜெயலலிதா 142 அடியாக உயர்த்தினார். அ.தி.மு.க ஆட்சியில் இரண்டு முறை 142 அடி உயர்த்தி காட்டினோம். மதுரை விமான நிலையத்திற்கு தேவர் பெயர் விவகாரம் குறித்த கேள்விக்கு,

தி.மு.க எந்த வாக்குறுதி கொடுத்தாலும் அதை நிறைவேற்றும் என்பதில் எங்களுக்கு நம்பிக்கையில்லை; தி.மு.க பொய்யான வாக்குறுதியை தான் கொடுப்பார்கள்.

 

முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் தலைமையோடு கலந்து பேசி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். கேரளாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவோம். மக்களுக்கு தி.மு.க இதுவரை ஒன்றுமே செய்யவில்லை. சட்டமன்ற உறுப்பினர் நிதி கூட எங்களுக்கு ஒதுக்கீடு செய்யவில்லை. தொகுதியில் வளர்ச்சிப்பணிகளை செய்ய நிதி ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.



 

நடிகர் ரஜினி மனிநேயமிக்கவர். எவ்வளவு பெரிய பதவி வந்தாலும், பாராட்டு வந்தாலும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள கூடிய மாபெரும் தலைவர் ரஜினிகாந்த். விரைவில் பூரண நலம் பெற்று ரஜினி வீடு திரும்ப வேண்டும். ரஜினிகாந்த் குணமடைந்து இன்னும் பல சிறப்பான புரட்சிகர படங்களில் நடிக்க வேண்டும் என அ.தி.மு.க சார்பில் தெரிவித்து கொள்கிறேன். விரைவில் குணமடைந்து தமிழ்நாடு மக்களுக்கு நல்ல படங்களை செய்திகளை ரஜினி காந்த் சொல்லுவார். தமிழ்நாடு என பெயர் சூட்டியது தான் அண்ணா. எந்த அரசு மாறினாலும் பெயர் சூட்டியதை எடுத்துக்கொள்ளாமல், வரைப்படம் உருவானதை வைத்தே தமிழ்நாடு நாள் கொண்டாடப்பட வேண்டும்.



 

தமிழ்நாட்டில் 2 ஆயிரம் அம்மா மினி கிளினிக்குகள் நிறுத்தப்பட்டு விட்டன. மக்கள் நலன் கருதி அம்மா மினி கிளினிக்குகளை தொடர்ந்து நடத்த வேண்டும். அதனால் தி.மு.க அரசுக்கு நல்ல பெயர் தான் கிடைக்கும். அம்மா மினி கிளினிக்கை மெருகேற்றி கூட செயல்படுத்தலாம். அதற்கு முதல்வர் அண்ணன் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும். அம்மா உணவகமும் ஏழை எளிய மக்களுக்கு வரப்பிரசாதமாக இருந்தது. அம்மா உணவகத்தை கருணையோடு தொடர்ந்து செயல்படுத்த கோரிக்கை விடுக்கிறேன். முதல்வர் ஆய்வு செய்து இரண்டு திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும் என பேசினார்.