தமிழக-கேரள எல்லையில் உள்ள முல்லைப்பெரியாறு அணை மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்கள் குடிநீர் மற்றும் பாசன வசதி பெற்று வருகிறது.  தேனி மாவட்டத்தில் பெரும்பாலும்  நெல், வாழை, தென்னை, திராட்சை உள்ளிட்ட விவசாய தொழில்கள் சார்ந்த பகுதியாக இருப்பதால் பெரும்பாலும் பருவ மழையை நம்பியே விவசாயங்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக கம்பம் பள்ளத்தாக்கிலிருந்து பழனிசெட்டிபட்டி வரையில் சுமார் 14707 ஏக்கர் பரப்பளவில் வருடந்தோறும் இரண்டு போக நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்த விவசாயம் பெரும்பாலும் முல்லை பெரியாறு அணையின் நீரை கொண்டே நடைபெற்று வருகிறது.




தற்போது கேரள மாநிலம் மற்றும் முல்லைப்பெரியாறு, தேக்கடி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.  இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. கடந்த 17ஆம் தேதி மாலை அணையின் நீர்மட்டம் 128.90 அடியாகவும் நீர்வரத்து வினாடிக்கு 1,435 கனஅடியாகவும் இருந்தது.  இந்நிலையில் நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக நீர் மட்டம் வேகமாக உயர்ந்தது.




அதன்படி நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 133 அடியாக உயர்ந்தது. அதாவது 2 நாளில் 4 அடி உயர்ந்து உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 1,435 கனஅடியில் இருந்து 5 ஆயிரத்து 926 கன அடியாக அதிகரித்தது.  முல்லைப்பெரியாறு அணையில் இருந்து நேற்று முன்தினம் வரை வைகை அணைக்கு வினாடிக்கு 1,300 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்தநிலையில் நீர்வரத்து அதிகரித்ததால் அணையில் இருந்து வைகை அணைக்கு நேற்று முதல் வினாடிக்கு 1,800 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. அணையில் 5 ஆயிரத்து 610 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. 




இன்றைய நிலவரப்படி வைகை அணைக்கு வரும் நீர் வரத்து அதிகரிப்பை தொடர்ந்து மொத்த 71 அடியில் தற்போது  56 அடியை எட்டியுள்ளது. நீர் இருப்பானது 2879 கன அடியாக உள்ளது. நீர் வரத்து வினாடிக்கு 1370 கன அடியாகவும் , நீர் திறப்பானது வினாடிக்கு 1119 கன அடியாகவும் உள்ளது. அணைகளில் கடந்த சில தினங்களாக நீர் வரத்து துரிதமாக அதிகரிப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


 


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற


https://bit.ly/2TMX27X


 


விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்,


தேனியில் பெண் போல் நடித்து குறுஞ்செய்தி மூலம் 3.5 லட்சம் மோசடி - நைஜீரியாவை சேர்ந்த நபர் கைது