மேலூர் அருகே, பெண் குழந்தைகளை தெய்வமாக வழிபடும் பாரம்பரிய திருவிழா : ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மதுகலயம் மற்றும் சிலைகளை ஊர்வலமாக எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு  செய்தனர்.

 

மதுரை மாவட்டம் மேலூர் அருகே வெள்ளலூர், உறங்கான்பட்டி, மலம்பட்டி, நயத்தான்பட்டி, குறிச்சிப்பட்டி, கோட்டநத்தாம்பட்டி, மற்றும் அதனைச் சுற்றியுள்ள 62 கிராமங்களை உள்ளடக்கியதை வெள்ளலூர் நாடு என்று அழைக்கப்பட்டு வருகின்றது. இந்த வெள்ளலூர் நாட்டின் முக்கிய திருவிழாவாக. ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில் ஏழைகாத்த அம்மன் கோயில் திருவிழா வெகு விமரிசையாக பிரமாண்டமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. 

 





இந்த திருவிழாவையொட்டி, பாரம்பரிய முறைப்படி கடந்த 12ம் தேதி வெள்ளலூரில் உள்ள ஏழைகாத்த அம்மன் கோயில் வீடு மந்தை முன்பு, வெள்ளலூர் நாட்டைச் சேர்ந்த 62 கிராமத்தைச் சேர்ந்த 11 கரைகளை சேர்ந்த, மக்கள் தங்களது பெண் குழந்தைகளை அம்மன் போல அலங்காரம் செய்து கோயில் வீட்டிற்கு அழைத்து வந்திருந்தனர், இதனைதொடர்ந்து, கிராம நாட்டார்கள் என்று அழைக்கக்கூடிய கிராம அம்பலகாரர்கள் மற்றும் இளஞ்கச்சிகள் முன்னிலையில் கோயில் பூசாரி சின்னதம்பி அம்மனாக வழிபாடு செய்வதற்கு 7 சிறுமிகளை  தேர்ந்தெடுத்தார். இதனைத் தொடர்ந்து தெய்வமாக தேர்ந்தெடுக்கப்படும் 7 பெண் குழந்தைகள். 15 நாட்களும் கோயில் தங்கி 62 கிராமங்களுக்கும் சென்று மக்களுக்கு ஆசி வழங்குவார்கள். அப்போது மக்கள் தங்களிடம் இருக்கும் நெல், ஆபரணம், உணவு பொருட்களை வழங்கி ஆசி பெறுவார்கள். 



 

இதனைத் தொடர்ந்து விழாவில் முக்கிய நிகழ்வான "மதுஎடுப்பு" திருவிழா  வெள்ளலூரில் உள்ள கோவில் வீட்டின் முன்பு தொடங்கியது. இதற்காக பச்சை நெல்லைக் குத்தி அதில் இருந்து எடுக்கப்படும் பாலை, மண்கலயத்தில் நிரப்பி அதன் மீது பிரியாத தென்னைக் குருத்தை வைத்து அலங்காரம் செய்யப்பட்ட மதுகலயம் தயார் செய்யப்படுகின்றது.

இதனைத்தொடர்ந்து ஏழைகாத்தம்மன் கோவில் பூசாரி சின்னதம்பி "பெரிய மதுவையும், தெய்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 7 பெண் குழந்தைகள் சிறு மதுவையும் தூக்கி வருகின்றனர், அப்போது அவர்களின் பின்னால் இந்த 62 கிராமத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மதுகலயம் மற்றும் சுவாமி சிலைகளை ஊர்வலமாக தலையில் சுமந்து வெள்ளலூரில் இருந்து, கோட்டநத்தாம்பட்டி, நயத்தான்பட்டி, குறிச்சிபட்டி வழியாக 8 கிலோ தொலைவில் உள்ள பெரிய கோவிலுக்கு எடுத்து வந்தனர், அப்போது வழி நெடுகிலும் பொதுமக்கள் பூசாரி மற்றும் 7 பெண் குழந்தைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வணங்கினர். 



 

இதற்கு முன்னதாக ஆண்கள் இப்பகுதியில் மழை பொழிந்து விவசாயம் செழிக்கவும், மற்றும் குடும்ப நலன் வேண்டி, வைக்கோலை திரிபோல சுருட்டி, உடலில் கால் முதல் கழுத்து வரை சுற்றிக்கொண்டும் முகத்தில் பல்வேறு விதமான முகமுடி அணிந்துக் கொண்டு, 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோயிலுக்கு நடந்தே வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுகின்றனர்.