’செட்டிநாட்டு வாசம் வீசும் கல்லல் பகுதி சிறிய நகரம் தான்.  நகரத்தார் மக்கள் அதிகம் வசிக்கும் இங்கு குளங்களும், கண்மாய்களும் அழகை கூட்டுகிறது. பங்களா மாதிரி பழமையான வீடுகளும், 10 ரூபாய்க்கு சாப்பாடு கொடுக்கும் பிச்சம்மை கேண்டீனும் ஊருக்கு கூடுதல் அழகு. லேசான பரபரப்பு நிறைந்த சாலையில் தண்ணீர் வண்டியை  கையால் தள்ளி வருகிறார் முதியவர் காளிமுத்து. அந்த பகுதியில் அவ்வண்டியை காண்டா வண்டி என அழைக்கின்றனர். அதன் மூலம் தண்ணீர் சப்ளை செய்யும் நபர் தான் காளிமுத்து ஐயா.



தனக்கென குடும்பங்கள் இல்லை. ஆனால் அவர் கூப்பிட்டதும் ஓடி வருகின்றன செல்லப்பிராணிகள். கொளுத்தும் வெயிலில் காண்டா வண்டியை கடகடவென சாலையில் தள்ளிச் சென்றார்.  உடல் உழைத்துக் களைத்த அவரது தேகம் இரக்கத்தை இறைக்கும். ஆனால் அவர் இரக்கத்தை எதிர்பார்ப்பவர் அல்ல. இரக்கமுடன் உதவி செய்யும் மாமனிதர். உதவி செய்ய கோடிக்கணக்கில் பணம் தேவையில்லை. நல்ல மனம் இருந்தால் போதும் என்று உணர்த்துகிறார்.



மேலாடை இல்லாமல் கசங்கிய வேட்டியுடன் அடிகுழாய்ப் பம்பில் மூச்சிரைக்க தண்ணீர் அடித்துக் கொண்டிருந்தார். அப்போது காளிமுத்து ஐயாவை சந்தித்தோம். தழ,தழத்த குரலில் பேசுகிறார்...., " எனக்கு 86 வயசு ஆச்சு. கல்லல் பக்கத்துல  குருந்தம் பட்டு தான் எனக்கு ஊரு. எனக்கு வெவரம் தெரிஞ்சதுல இருந்து, கூலி வேலை  பார்த்துதான் சாப்பிடுறேன். யார்கிட்டயும் போய் அஞ்சு, பத்துனு நிக்கமாட்டே. கல்யாணம் ஆகாத எனக்கு புள்ள குட்டி எல்லாம் இல்ல. வாயில்லா ஜீவன்களை புள்ளையா நினைச்சு தான் பார்ப்பேன். அப்படியே ரோட்டு ஓரத்தில் உள்ள கட்சி ஆபீஸ்ல இரவைக்கு தங்கிக் கிறுவேன். இந்த காண்டா வண்டில 6 கேன் இருக்கும்  ஒரு தடவை...., டீக்கடைக்கும்,  ஓட்டலுக்கு எடுத்துட்டு போய் கொடுத்தால் 40 ரூவா.. தருவாக. ஒரு நாளைக்கு 5, 6 நட அடிச்சிருவேன். நானும் சாப்பிட்டுட்டு வாயில்லா ஜீவன்களுக்கு மிச்சமிருக்கிற காசுக்கு வாங்கி கொடுத்திடுவேன். எனக்குனு யார் இருக்காக சேர்த்து வச்சு என்ன பண்ணப்போறேன்" என்று சிரித்தபடி நகர்கிறார்.



"கல்லல் நகரில் போர்வெல் இல்லாத டீக்கடை, ஹோட்டல் போன்ற கடைகளுக்கு தினசரி தண்ணீர் அடித்து கொடுக்கும் வேலையை 50 வருடமாக காளிமுத்து தாத்தா செய்துவருகிறார். கடுமையாக உழைக்கும் முதியவருக்கு தினசரி கூலி 200 தான். ஆனால்  ஒரு வேளை உணவு உண்டு வாயில்லா ஜீவன்களுக்கு கண்டிப்பாய் உணவு வழங்கிறார். ’மாட்டுக்குத்தானே’ என அழுகிய காய்கறிகளை அவர் வாங்குவது இல்லை. சமையலுக்கு போல் தேர்வு செய்து  வாங்குகிறார். நாய்குட்டிகளுக்கு பண், பிஸ்கட், போண்டா, வடை பல ரகம் காட்டுகிறார்



 

 தனது வயதான காலத்தில்  உழைத்து உண்ண வேண்டும் என்ற எண்ணம் எத்தனை பேருக்கு தான் வரும். இன்றைய கால கட்டத்தில், படித்ததற்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை என்று புலம்பும் இளைஞர்களுக்கு மத்தியில் இந்த முதியவரின் செயல் தன்னம்பிக்கை ஊட்டுகிறது. உணவகத்தில் இலவசமாக உணவு வழங்கினாலும் தான் உழைத்து சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் முதியவருக்கு உண்டு.” என முதியவர் காளிமுத்து ஐயாவைப் பற்றி விளக்கினார் கொல்லங்குடி புலவர் கா.காளிராசா.

 

காளிமுத்து ஐயா மனித குளத்தின் மாண்பு அன்பை பிரதிபலிக்கும் அட்சய பாத்திரம். சிவகங்கை மாவட்டம் கல்லல் பகுதியில் சுற்றித்திரியும் ஜீவ ராசிகளுக்கு இவர் தான் ஜீவ நதி.