சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டையில் புகழ்பெற்ற செவ்வாய் பொங்கல் நிகழ்ச்சி நேற்று மாலை துவங்கி இன்று அதிகாலை வரை நடைபெற்றது. ஆண்டுதோறும் மாட்டுப்பொங்கல் முடிந்து வரும் முதல் செவ்வாய் அன்று செவ்வாய் பொங்கல் நடைபெறும். நாட்டரசன்  கோட்டையை பூர்வீகமாக கொண்ட நகரத்தார்கள் தங்கள் பணி நிமித்தம் காரணமாக வெளியூர்களிலும், வெளி நாடுகளில் இருந்தாலும் செவ்வாய் பொங்கல் நிகழ்ச்சியில் அவசியம் கலந்துகொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.



 

ஒரு குடும்பத்தை ஒரு புள்ளி என்று கணக்கில் எடுத்துக் கொண்டு ஒவ்வொரு புள்ளிகளின் பெயரை சீட்டாக வெள்ளி  பானையில் போட்டு ஒரு சீட்டை மட்டும் தேர்வு செய்து சிறப்பு பொங்கல் வைக்க அனுமதிப்பார்கள். அவர்கள் மட்டும் மண்பானையில் பொங்கலிட்டு கிடாய் வெட்டுவார்கள். மற்ற நபர்கள் வெள்ளி அல்லது வெங்கல பானையில் பொங்கல் வைத்து விரும்பினால் கிடாய் வெட்டுவார்கள். இந்தாண்டு 918 புள்ளிகள் தங்களின் பொங்கல் வைத்தனர். இதில் 60க்கும் மேற்பட்ட கிடாய்கள் கோயிலில் வெட்டப்பட்டது. இந்த நிகழ்வில் இனிப்பு பொங்கல் வைக்க கூடாது என்று அனைவரும் வெண் பொங்கல் மட்டும் இடுவார்கள்.  இந்தாண்டு தைப் பொங்கல் முடிந்து வந்த செவ்வாய் கிழமையான நேற்று மாலை 5 மணிக்கு பொங்கல் வைக்கப்பட்டது.



 

தொடர்ந்து அனைவரும் பொங்கல் வைத்து கிடாய் வெட்டு நிகழ்வு இன்று அதிகாலை வரை நடைபெற்றது. இந்த செவ்வாய் பொங்கல் நிகழ்ச்சியில் தங்களது மகன், மகள்களுக்கு பெற்றோர்கள் வரன் தேடும் நிகழ்ச்சியாகவும்  பயன்படுத்தி கொள்கின்றனர் என்பது குறிப்பிட தக்கது. பொங்கல் விழாவை முன்னிட்டு, அம்மனுக்கு தைலம், திருமஞ்சனம், மஞ்சள், பால், பஞ்சாமிர்தம், இளநீர் உள்ளிட்ட 16 வகையான பொருள்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு, தங்க அங்கி அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு விசேஷ தீபாராதனைகள் நடைபெற்றன. அதன் பின்னர், கோயிலைச் சுற்றி ஒரே வரிசையில் அமைக்கப்பட்ட அடுப்புகளில் பொங்கல் வைக்கும் நிகழ்வு நடைபெற்றறது.

 



 

இந்த நிகழ்ச்சி குறித்து காரைக்குடியை சேர்ந்த பிரபாகரன் கூறுகையில், பாரம்பரியமாக நடந்து வரும் செவ்வாய் பொங்கல் நிகழ்வு இந்தாண்டு கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றது. நாங்கள் காரைக்குடியில் வசித்தாலும் செவ்வாய் பொங்கல் அன்று சொந்த ஊரான நாட்டரசன் கோட்டைக்கு வந்துவிடுவோம். ஒவ்வொரு குடும்பத்தின் நபர்களும் புள்ளிகளாக கணக்கில் வந்துவிடுவார்கள். புதிதாக திருமணம் செய்தி நபர்கள் புதிய புள்ளியாக கணக்கில் எடுத்துக் கொள்வார்கள். நகரத்தார் மக்கள் மட்டும் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் பெண் பார்க்கும் படலமும் நடைபெறும். திருவிழாவிற்கு வரும் நபர்கள் யார் வீட்டில் மாப்பிள்ளை உள்ளதோ அவர்கள் இதனை பேசி முடித்துக் கொள்வர்கள். செவ்வாய் பொங்கல் மூலம் பல்வேறு திருமணங்கள் நடைபெற்றுள்ளது. என கூறினார்.