உசிலம்பட்டி அருகே இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வண்ணம் இயற்கை விவசாயி தனது இல்ல விழாவில் பாரம்பரிய அரிசிகள் மூலம் உறவினர்களுக்கு விருந்தளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வேப்பனூத்து கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தையா. இயற்கை விவசாயியான இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இயற்கை சார்ந்தே உரமின்றி விவசாயம் செய்து வருவதாக கூறப்படுகிறது. வேளாண் விஞ்ஞானியாக போற்றப்படும் நம்மாழ்வார் வழியில் தொடர்ந்து தற்சார்பு வாழ்வியலை நோக்கி பயணிப்பதாகவும் தெரிவிக்கிறார்.
தனது தோட்டத்தில் விளைவித்த பாரம்பரிய நெல் மூலம் கிடைக்கும் அரிசிகளை மட்டுமே உணவாக சமைத்து உண்டு வந்த முத்தையா. தனது உறவினர்களுக்கும் இயற்கை விவசாயத்தின் பலன் குறித்து அறிந்து கொள்ளும் விதமாகவும், தான் விளைவித்த பாரம்பரிய நெல் வகைகளை தான் உண்டு வாழ்வதை விட தனது சொந்த பந்தங்களும் தெரிந்து கொள்ளும் வண்ணமும் இல்ல விழா நடத்தி விருந்தளிக்க திட்டமிட்டுள்ளார். தமிழர்களின் பாரம்பரியம் சொந்த பந்தங்களுக்கு விருந்தளித்து மகிழும் வழக்கத்தை நினைவு படுத்தும் விதமாக சமீபத்தில் தனது இல்ல விழா நடைபெறுவதாக அனைத்து சொந்தங்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
இல்ல விழாவிற்கு வந்த சொந்த பந்தங்களுக்கு தான் விளைவித்த பாரம்பரிய நெல் வகைகளான காட்டுயானம், கருப்புக் கவுனி, தங்கச் சம்பா, சீரகச் சம்பா அரிசிகளில் உணவு தயாரித்து விருந்து படைத்தார். தங்க சம்பா அரிசியில் பொங்கலும், காட்டுயானம், கருப்பு கவுனி அரிசியில் சிறிதளவு உணவு மற்றும் சீரகசம்பா அரிசியில் செய்த சாப்பாட்டை வெள்ளை சாப்பாடாக தயாரித்து 3 கிடா வெட்டி கறிவிருந்து அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலான இல்ல விழாக்களில் தற்போது மேலை நாடுகளின் உணவுகள் நவீன உணவாக வழங்கப்பட்டு வரும் சூழலில் இயற்கை சார்ந்த தான் விளைவித்த பாரம்பரிய நெல் வகைகளின் அரிசி மூலம் இயற்கை விவசாயி உணவளித்தது மகிழ்ச்சியை அளித்ததாகவும், உணவும் தரமானதாக சுவையானதாக இருந்தாக உறவினர்கள் தெரிவித்தனர்.
மேலும் உறவினர்கள் சிலர் நம்மிடம் பேசுகையில், “உலகம் டிஜிட்டலை நோக்கி சென்றாலும் உடல் பாதுகாப்பில் மக்கள் விழிப்புணர்வு அடைந்து வருகின்றனர். உடல் பாதுகாப்பிற்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் இயற்கை விவசாயம் மிக முக்கியமானது. அதன் விழிப்புணர்வை சொந்த விழாக்களில் முன்னெடுப்பது வரவேற்கதக்கது. முத்தையாவின் முயற்சி பாராட்டப்பட வேண்டியது. விழாவில் கலந்துகொண்டபோது காட்டுயானம், கருப்புக் கவுனி, தங்கச் சம்பா, சீரகச் சம்பா உள்ளிட்ட நெல் வகை குறித்தும் தெரிந்து கொள்ள முடிந்தது. குழந்தைகளுக்கு இதைப் பற்றி சொல்லிக் கொடுத்தோம். அவர்களும் இதனை ஆர்வமாக தெரிந்துகொண்டனர்” என தெரிவித்தனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Madurai Meenakshi Amman: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் ... விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்கியது பாலாலயம்.. பக்தர்கள் பரவசம்..!
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Crime: தூங்கி கொண்டிருந்த கணவர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றி கொன்ற மனைவி - திண்டுக்கல்லில் அதிர்ச்சி