தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு தலைவர் பசுபதிபாண்டியன் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய திண்டுக்கல் நந்தவனபட்டியைச் சேர்ந்த நிர்மலா என்ற பெண் சில தினங்களுக்கு முன்பு தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். கொலை செய்து தலையை மட்டும் எடுத்துச் சென்ற கொலையாளிகள் பசுபதி பாண்டியன் வீட்டில் வைத்து விட்டுச்சென்ற கொடூர சம்பவம் திண்டுக்கல்லில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு தலைவராக இருந்த பசுபதிபாண்டியன் திண்டுக்கல் நந்தவனப்பட்டியில் அவரது வீட்டில் இருந்தபோது கடந்த 2012 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10 ஆம் தேதி ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தூத்துக்குடியை சேர்ந்த சுபாஷ் பண்ணையார், புறா மாடசாமி, திண்டுக்கல்லைச் சேர்ந்த முத்துப்பாண்டி, நிர்மலா உள்ளிட்ட 16 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை திண்டுக்கல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்தநிலையில் பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் கொலையாளிகளுக்கு நந்தவனப்பட்டி பசுபதி பாண்டியன் வசித்த பகுதியில் வீடு வாடகைக்கு பிடித்து கொடுத்து உதவியதாக நந்தவனப்பட்டி நிர்மலா (60) ஐந்தாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை வாய்தா அடுத்த மாதம் 18.10.2021 அன்று திண்டுக்கல் நீதிமன்றத்திற்கு வருகிறது .
இந்த நிலையில் நிர்மலாவை திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டி அருகே உள்ள ஈபி கலனி ரோடு பகுதியில் மர்ம நபர்கள் சிலர் கண்ணிமைக்கும் நேரத்தில் நிர்மலாவை பயங்கர ஆயுதங்கள் கொண்டு வெட்டிக்கொலை செய்து தலையை மட்டும் துண்டித்து சென்றனர். பின்னர் கொலையாளிகள் வெட்டப்பட்ட தலையை பசுபதிபாண்டியன் நந்தவனப்பட்டியில் கொலை செய்யப்பட்ட அவரது வீட்டில் அவரது பிளக்ஸ் பேனர் அருகே வைத்து விட்டு சென்று விட்டனர் .
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் திண்டுக்கல் சரக டிஐஜி விஜயகுமாரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் கொலையாளிகள் குறித்து தேடும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில், திண்டுக்கல்-மதுரை தேசிய நெடுஞ்சாலை சின்னாளப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே இருப்பதாக எஸ்பி.சீனிவாசனுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி எஸ்பி தனிப்படையினர் அங்கு பதுங்கி இருந்த 3 நபர்களை பிடித்து விசாரணை செய்ததில் நிர்மலா தேவி கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என்று தெரியவந்தது. அதனடிப்படையில் திண்டுக்கல் செம்பட்டி, மேட்டுப்பட்டியை சேர்ந்த அய்யனார் (21), தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தென் மண்டல செயலாளர், திண்டுக்கல் அருகே உள்ள கரட்டழகன்பட்டியைச் சேர்ந்த பெ.நடராஜன் (45), செம்பட்டி சீவல்சரகு பகுதியைச் சேர்ந்த பூபாலன் (21) ஆகிய 3 பேரை போலிசார் கைது செய்து திண்டுக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2-ல் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர் 3 பேரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.