மதுரையில் முக்கிய இடங்களில் கை குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் நபர்களை கண்காணித்து அவர்களிடமிருந்து குழந்தைகளை மீட்டு கைது செய்யும் நடவடிக்கையை காவல் துறையினர் மற்றும் குழந்தை நல அமைப்பினர் தீவிர படுத்தியுள்ளனர். மதுரை மாநகர் பகுதிகளில் ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள், கோரிப்பாளையம், காளவாசல் உள்ளிட்ட முக்கிய சாலை சந்திப்புகளில் கை குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இது தொடர்பான புகார்கள் அதிகளவில் குழந்தைகள் நல அமைப்பினருக்கு வந்த நிலையில், மாநகர காவல்துறையின் விபச்சாரம் மற்றும் ஆட்கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் இணைந்து அவர்களை கைது செய்து விசாரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். 

 


 

முதற்கட்டமாக, மதுரை ரயில் நிலைய வாயில் மற்றும் காலவாசல் பகுதிகளில் இருந்த சந்தேகிக்கும் படியான நிலையில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்துக் கொண்டிருந்த நபர்கள் மற்றும் குழந்தைகளை மீட்டுள்ளனர். மேலும் மதுரையில் பல்வேறு பகுதிகளில் பிச்சை எடுத்த ஆறு குழந்தைகளையும் மீட்டுள்ளனர் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.  மீட்கப்பட்ட குழந்தைகள் அனைவரும் பழங்காநத்தம் பகுதியில் உள்ள சமுதாய கூடத்தில் வைத்து விசாரணை நடத்தி வரும் நிலையில் குழந்தைகளை பிச்சை எடுக்க விட்ட நபர்கள் மீது மீது நடவடிக்கை எடுத்து குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய முயற்சி எடுக்கப்படும் என காவல் துறையினர் மற்றும் குழந்தைகள் நல அமைப்பினர் தெரிவித்துள்ளனர். 






 

இது குறித்து குழந்தைகள் நல பாதுகாப்பு அமைப்பினர் கூறுகையில் மதுரை மாநகரில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்தவர்களை மீட்கும் பணியில், ஈடுபட்டுள்ளோம். இந்த சூழலில் தற்போது மதுரை முழுவதும் உள்ள சிக்னல்களில் பிச்சையெடுக்க வைக்கப்பட்ட 20 குழந்தைகள் மீட்டுள்ளோம். இதனைத்தொடர்ந்து, மதுரை மாநகரில் பிச்சையெடுக்க வைக்கப்பட்ட குழந்தைகள் அவர்களின் சொந்த குழந்தைகளா அல்லது திருடியோ, கடத்தி வரப்பட்டு விலைக்கு வாங்கப்பட்ட குழந்தைகளா என்று பிச்சையெடுக்க வைத்த நபர்களை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்த உள்ளனர்.

 



 

மீட்கப்பட்ட குழந்தைகள்  பாதுகாப்பாக வைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம். மதுரை மாநகருக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள போக்குவரத்து சிக்னல்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக பச்சிளம் குழந்தைகள் மற்றும் இளம் சிறார்களை வைத்து பிச்சை எடுப்பது போக்குவரத்திற்கு இடையூறு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் எழுவதாக தொடர்ந்து எங்களுக்கு வந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனைகள் நடைபெற்று வருகின்ற” என தெரிவித்தனர்.