மதுரை தமுக்கம் மைதானத்தில் அரசு சித்திரை பொருட்காட்சி 23-ஆம் தேதி தொடங்குவதாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார்.
சித்திரைத் திருவிழா 2024
மதுரை கள்ளழகர் சித்திரைத் திருவிழா கடந்த மாதம் 19-ம் தேதி தொடங்கிய நிலையில் மீனாட்சி திருக்கல்யாணம், திக் விஜயம், தேரோட்டம் நடைபெற்றது. தொடர்ந்து லட்சக்கணக்கான பக்தர்கள் முன்பாக பச்சை பட்டுடுத்தி தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளினார். இதனைத்தொடர்ந்து மதிச்சியம் பகுதியில் உள்ள ராமராயர் மண்டகப்படியில் தீர்த்தவாரி நிகழ்வு நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து கள்ளழகர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பக்தர்கள் அருள்பாலித்து மலைக்கு திரும்பினார். இந்நிலையில் இந்த மாதம் மதுரை தமுக்கம் மைதானத்தில் அரசு சித்திரைப் பொருட்காட்சி 23 ஆம் தேதி தொடங்குவதாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமுக்கம் மைதானத்தில் அரசுப் பொருட்காட்சி
மதுரை தமுக்கம் மைதானத்தில் அரசுப் பொருட்காட்சி – 2024 தொடக்க விழா நிகழ்ச்சியினை 23.05.2024-அன்று மாலை 5 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா தொடங்கி வைக்க உள்ளார்கள். திருவிழா நகரான மதுரையில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக ஆண்டுதோறும் அரசுப் பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகின்றது. நடப்பாண்டில் மதுரை தமுக்கம் மைதானத்தில் “அரசுப் பொருட்காட்சி – 2024“ தொடக்க விழா நாளை 23.05.2024 மாலை 5 மணியளவில் நடைபெறவுள்ளது. இவ்விழாவில், பல்வேறு அரசுத்துறைகளைச் சார்ந்த உயர் அலுவலர்கள் பங்கேற்க உள்ளார்கள்.
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்
இந்தப் பொருட்காட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, பள்ளிக்கல்வித்துறை, இந்து சமய அறநிலையத்துறை, காவல்துறை உள்ளிட்ட 27 அரசுத்துறை அரங்குகளும், மதுரை மாநகராட்சி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், ஆவின், உள்ளிட்ட அரசு சார்பு நிறுவனங்கள் மூலம் 6 அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. அரசு மக்கள் நலனுக்காக செயல்படுத்தி வரும் நலத்திட்டங்கள், அவற்றில் பயன்பெறும் வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் அரசுத்துறைகளின் சார்பாக கண்கவரும் வகையில் அரங்குகள் இடம்பெற உள்ளன.
45 நாட்களுக்கு சித்திரைப் பொருட்காட்சி
மேலும், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அரசுத்துறைகளின் சார்பாக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. அதேபோல, இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த தனியார் விளையாட்டு மற்றும் கேளிக்கை அரங்குகள், பல்பொருள் விற்பனை அங்காடிகள் இடம்பெற உள்ளன. மேலும், தினந்தோறும் இன்னிசை கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. அரசுப் பொருட்காட்சி 23.05.2024-அன்று தொடங்கி 45 நாட்கள் தினமும் மாலை 04.00 மணிமுதல் இரவு 10.00 மணி வரை நடைபெற உள்ளது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Mariyappan Thangavelu: அடி தூள்..ஜப்பானில் சம்பவம் செய்த தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு!
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Makkaludan Mudhalvar Camp: ரெடியா மக்களே! 12,525 கிராமங்கள்.. 2500 சிறப்பு முகாம்கள்!