பெண் இன்ஸ்பெக்டர் சத்தியசீலாவிற்கு இடைக்கால ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து வழக்கு விசாரணை ஒத்திவைத்து உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

 

கோயில் விழாவில் தகராறு:



விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சத்யா நகரைச்  சேர்ந்தவர் ராமர்-(60). இவருக்கும் இதே பகுதியைச் சேர்ந்த ராமசாமி-(65) குடும்பத்திற்கும் முன்விரோதம் இருந்துவருகிறது. இந்நிலையில் கடந்த 21-ம் தேதி முத்துமாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு, சிங்கம் சிலை வைக்க வேண்டும் என ராமசாமி மகன் ராம்குமார் கூறியுள்ளார். அதற்கு ராமர் எதிர்ப்பு தெரிவித்ததால், ராமசாமி குடும்பத்திற்கும் இடையே மீண்டும் பிரச்னை வெடித்தது.


அப்போது ராமசாமி அவரது மகன்கள் ராம்குமார், ராஜேந்திரன் மற்றும் இரு பெண்கள் சேர்ந்து கல், இரும்பு என கையில் கிடைத்ததை வைத்து ராமரை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த ராமர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக ராமரின் மனைவி அன்னலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் ஸ்ரீ வில்லிபுத்தூர் நகர் காவல்துறையினர் ராமசாமி, ராம்குமார், ராஜேந்திரன் மற்றும் இரு பெண்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர். 


பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்:


இந்நிலையில் கடந்த 25-ம் தேதி சிகிச்சை பலனின்றி ராமர் உயிரிழந்தார். இதையடுத்து அந்த வழக்கை கொலை வழக்காக மாற்றிய காவல்துறையினர் ராமசாமி, ராஜேந்திரன், ஜெயலட்சுமி ஆகியோரை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய ராம்குமார் மற்றும் மேலும் ஒரு பெண்ணை தீவிரமாக தேடி வந்த நிலையில் கைது செய்யப்பட்டனர்.


பெங்களூரில் மறைந்திருந்த ராம்குமாரை ட்ரேஸ் செய்த போது கையும் களவுமாக இருவரும் சிக்கினர் என்பதும் குறிப்பிடதக்கது. இதில் ராம்குமார் உடன் கைதான பெண், சத்யசீலா ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாமில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருவது தெரியவந்தது. இதையடுத்து கொலை வழக்கில் தொடர்புடைய பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்து ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி., துரை உத்தரவிட்டுள்ளார்.


பெண் இன்ஸ்பெக்டர் பின்னணி



பெண் இன்ஸ்பெக்டர் சத்திய சீலா, சிவகங்கை மகளிர் காவல்நிலையத்தில் பணி செய்த போது பல்வேறு சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டடுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணம் கொடுக்கும் நபர்களுக்கு மட்டும் சாதகமாக நடந்து கொண்டதாக சொல்லப்படுகிறது. அதே சமயம் இணையத்தில் ரீல்ஸ் பார்க்கும் போது ஸ்ரீவில்லிப்புத்தூர் ராம்குமார் நட்பு கிடைத்துள்ளது. இதனால் இருவரும் நெருங்கிப் பழகவே கணவன் - மனைவி போல் சுற்றி வந்துள்ளனர்.

 

இந்த சூழலில் தொழில் அதிபர் ஒருவர் மீது பொய்யான போக்ஸோ வழக்கை பதிவு செய்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்த உயர் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் சத்திய சீலா உள்ளிட்ட 10 காவலர்கள் சிக்கினர். ஆனால் பெரிய நடவடிக்கை எடுக்காமல் சத்திய சீலா ராமநாதபுரம் மண்டபம் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளார். தொடர்ந்து ராமநாதபுரத்தில் பணி செய்த சத்திய சீலா ராம்குமாருடன் இணைந்து பைனான்ஸ் செய்து வந்ததுள்ளதகாவும் கூறப்படுகிறது. இந்த சூழலில் தான் கொலை வழக்கில் குற்றவாளி ராம்குமாருடன் பெங்களூரில் தலைமறைவாக இருந்த நிலையில் சிக்கியுள்ளார்.

 

ஜாமின் கோரிய இன்ஸ்பெக்டர் சத்திய சீலா


 

மதுரை மாவட்டம் நெடுங்குளத்தைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் சத்தியசீலா உயர்நீதிமன்ற மதுரைக்கிழங்கில் ஜாமீன் கோரி மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்," ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 22 ஆம் தேதி நடைபெற்றது. அப்போது ராமர் என்பவரை முன்விரோதம் காரணமாக சிலர் தாக்கினர்.  இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.  இது தொடர்பாக என் மீதும் புகார் எழுந்துள்ளது. முதல் தகவல் அறிக்கையில் எனது பெயர் இடம்பெறாத நிலையில், என் மீது வேண்டுமென்றே குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இது ஏற்கத்தக்கது அல்ல. ஆகவே இந்த வழக்கில் எனக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார். சத்தியஷீலா கைது செய்யப்பட்டதால் இந்த வழக்கை ஜாமீன் கோரும் வழக்காக விசாரிக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டது. 

 

ஜாமின் வழங்க மறுப்பு


 

இந்த வழக்கு நீதிபதி விக்டோரியா கவுரி முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், "தனது பிள்ளைகளை கல்லூரியில் சேர்ப்பது தொடர்பான பணிகள் இருப்பதால் அதனை கருத்தில் கொண்டு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என கோரப்பட்டது. இடைக்கால ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்த நீதிபதி, வழக்கை ஜூன் 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.