"என் மீது பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது, சட்டம் அனைவருக்கும் சமமானது தான், நீதித்துறையை நம்பியுள்ளேன், எனக்கான நீதி கிடைக்கனும்"  என மதுரை நீதிமன்றத்தில் டி.டி.எஃப் வாசன் பேசினார்.

 

மதுரையில் வழக்கு


பிரபல யூடியூபரும், பைக் ரேஸருமான டி.டி.எஃப்., வாசனுக்கு வழக்கு ஒன்றில் 10ஆண்டுகள் பைக் ஓட்டுவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால் வாசன் தனது கார் மூலமாக ஊர் ஊராக சுற்றிவருகிறார். இதனால் காரை இயக்கியபடி வீடியோவாக பதிவு செய்து வருகிறார். இந்நிலையில்,  கடந்த 15ஆம் தேதி இரவு 7.50 மணிக்கு மதுரை வண்டியூர் டோல்கேட் பகுதியில் ”TN 40 AD 1101” - என்ற கார் ஓட்டியுள்ளார். அப்போது அஜாக்கிரதையாகவும், கவன குறைவாகவும் ஓட்டியுள்ளார். செல்போனில் பேசிக் கொண்டே வண்டி இயக்கியுள்ளார். இது கேமராவில் பதிவு செய்யப்பட்டு யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மதுரை மாநகர ஆயுதப்படை சார்பு ஆய்வாளரான மணிபாரதி என்பவர், அளித்த புகாரின் கீழ், அண்ணாநகர் காவல்துறையினர் வாசன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இது தொடர்பான விசாரணைக்காக சென்னையில் கைது செய்யப்பட்ட டி.டி.எஃப் வாசன் மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் விசாரணை செய்யப்பட்டார்.

 

விசாரணையில் வாசன்


 

இதனையடுத்து, மரணத்தை  விளைவிக்கும் வகையில் பிறருக்கு மரணம் உண்டாகும் என்ற, தெளிவுடன் ஒரு வாகனத்தை இயக்கியதாக 308 பிரிவின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஏற்கனவே பைக் ஓட்டுவதற்கு 10 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது, மதுரையிலிருந்து தூத்துக்குடி செல்லும்போது. காரில் பேசியபடி ஆபத்தை விளைவிக்கும் வகையில் காரை இயக்கியதாக டி.டி.எஃப் வாசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து வாசனை, அண்ணாநகர் காவல்துறையினர் கைது செய்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.

 

நீதிமன்றம் முன் டி.டி.எஃப் வாசன் முழக்கம்


 

இதன் பின்னர் மதுரை மாவட்ட நீதிமன்றத்திற்கு ஆஜர் படுத்துவதற்காக அண்ணாநகர் காவல் நிலையத்தில் இருந்து காவல் துறையினர் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார். அப்போது காவல்நிலையத்தின் முன்பாக பேசிய டி.டி.எஃப் வாசன், “நான் யாருடைய உயிருக்கு பங்கம் விளைவித்தேன் ?., என் மீது வேண்டுமென்றே பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போதையில் காரை ஓட்டி இரண்டு பேரை கொன்றவருக்கு பெயில்!, எனக்கு வழக்கா?. சட்டம் என்பது எல்லோருக்குமானது தான். ஆனால் சாலையில் மதுபோதையில் செல்பவர்கள் மீது நடவடிக்கைகள் இல்லை. என் மீது மட்டும் போனில் அவுட் ஸ்பீக்கரில் பேசியபோதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நான் நீதித்துறையை நம்பியுள்ளேன். எனக்கான நீதி எனக்கு கிடைக்கனும்” என முழக்கமிட்டார். இதேபோன்று நீதிமன்ற வளாகத்தில் சென்றபோது என்னைப் பார்த்து தான் இளைஞர்கள் கெட்டுப் போகிறார்களா? எனவும் வீதிக்கு ஒரு டாஸ்மாக் உள்ளது தெரியாதா எனவும் முழக்கமிட்டபடி சென்றார்.

 

இந்த நிலையில், இந்த வழக்கில் நீதிமன்றம் டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. வழக்கின் விசாரணையின்போது, தான் வாகனத்தை வேகமாக ஓட்டவில்லை என்றும், தன் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாகவும் வாசன் தரப்பில் வாதம் செய்தபோது தெரிவிக்கப்பட்டது. மேலும், தான் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும், தற்போது தான் திருந்தி வாழ்ந்து வருவதாகவும் வாசன் தெரிவித்தார்.