ரவுடிகளுக்கு பயத்தை ஏற்படுத்தும் போலீஸ் அதிகாரியின் பெயர் " என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரை ". வெள்ளதுரை ஒரு மாவட்டத்தில் இறங்கிவிட்டார் என்றாலே, ரவுடிசம் கட்டுக்குள் வந்துவிடும் என்பது பொதுமக்களின் நம்பிக்கை. சென்னையை பயத்தில் உறைய வைத்த ரவுடி  அயோத்தி குப்பம் வீரமணி, சந்தன கடத்தல் வீரப்பன்  ஆகியோரை என்கவுண்டர் செய்த சிறப்பு படையில் உறுப்பினர் இவர். மதுரையின் ரவுடிகள் கவியரசு , முருகன் என்கவுண்டர் பின்னணியிலும் இவரே இருப்பதாக சொல்வார்கள். இப்படி12க்கும் மேற்பட்ட என்கவுண்டர்களில் பின்னணியில் இருந்தவர் வெள்ளத்துரை.


சமீபத்தில் கூட சென்னை புறநகர் பகுதிகளில் அச்சுறுத்தில் ஈடுபட்டு வந்த  ரவுடிகளை பிடிக்க சிறப்பு கூடுதல் காவல் கண்காணிப்பாளராக  தமிழக அரசால் நியமிக்கப்பட்டார் வெள்ளத்துரை. இப்படி காவல்துறையில் செல்வாக்கு மிக்கவராக விளங்கிய வெள்ளதுரை, ஓய்வு பெறுவதற்கு ஒரு நாளுக்கு முன்பு, பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பது காவல்துறையினர் மத்தியில் மட்டுமல்ல பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக வெள்ளத்துரைக்கு அமைதியான முறையில் ஓய்வு அளிக்க வேண்டும் என காவல்துறை சார்பில் பரிந்துரை செய்யப்பட்ட நிலையில், இந்த நடவடிக்கை அவர் மீது பாய்ந்துள்ளது.


" உதவி ஆய்வாளர் கொலை "


சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றியவர் ஆல்வின் சுதன். இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 27ஆம் தேதி மருதுபாண்டியர் நினைவு தினத்தின்பொழுது, வேம்பத்தூர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார். அங்கு புதுக்குளத்தை சேர்ந்த பிரபு தரப்பிற்கும்,  செல்ல பாண்டியன் தரப்பிற்கும்  மோதல்ஏற்பட்டது, இது தொடர்பாக விசாரணைக்கு சென்ற பொழுது பிரபு தலைமையில் வந்த 37 பேர், காவல்துறை வாகனங்கள் மீது கற்களை வீசி தாக்கினர். இதில் உதவி ஆய்வாளர் ஆல்வின் சுதன் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். 


என்கவுண்டரில் இரண்டு பேர் கொலை


இந்த வழக்கு தொடர்பாக பிரபு மற்றும் பாரதி ஆகிய இருவரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். இருவரையும் விசாரணைக்காக அழைத்துச் சென்ற பொழுது காவலர்களை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். தப்பிச் சென்றவர்கள் தலைமறைவாக இருந்த இடத்தை காவலர்கள் கண்டுபிடித்தபோது  டிஎஸ்பி வெள்ளத்துரை தலைமையிலான அதிரடி படையினர் அங்கு விரைந்து வந்தனர். அவர்களை பார்த்ததும் தப்பி ஓடிய இரண்டு பேரும் வெடிகுண்டுகளை வீசி தாக்க முயற்சி செய்தனர். போலீசார் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர் இதில் இரண்டு பேரும் , என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.


சிக்கிய கொக்கி குமார்


இந்த வழக்கில் தொடர்புள்ள மூன்றாவது குற்றவாளி கொக்கி குமார் என்கிற ராமு கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூன் மாதம் , திருப்பாச்சேத்தி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் சுரேஷ் என்பவரிடம் 500 ரூபாய் வழிப்பறி செய்துள்ளார். கொக்கி குமாரை கைது செய்ய உதவி ஆய்வாளர் துரை சிங்கம், திருப்பாச்சேத்தி ரயில்வே கேட்டு அருகே சென்ற பொழுது கொக்கி குமார் காவல்துறையினரை தாக்க முயற்சி செய்திருக்கிறார். அப்போது காவல்துறையின் அவரை மடக்கி பிடித்தனர். அவர்களிடமிருந்து தப்பிக்க முயற்சித்த கொக்கி குமார், இரண்டு மூன்று இடங்களில் தவறி விழுந்துள்ளார். அதனால், அவரது உடலில் ஒரு சில இடங்களில் காயங்கள் ஏற்பட்டது.  பின்னர் போலீசார் கொக்கி குமாரை பிடித்துவிட அவரை காவல்நிலையம் அழைத்து செல்லும் வழியில் நெஞ்சுவலி ஏற்பட்டாதாக கூறப்படுகிறது. அவரை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில்  உயிரிழந்துள்ளார். ‌


வெள்ளத்துரை மீது வழக்கு 


இந்தநிலையில் கொக்கி குமாரின் தந்தை பாண்டிமுத்து , டிஎஸ்பி வெள்ளத்துரை கம்பியை எடுத்து சித்திரவதை செய்து தனது மகனை கொலை செய்ததாக புகார் அளித்தார். தொடர்ந்து இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். காவல்துறையினர் விசாரணையின் போது அடித்துக் கொலை செய்யப்பட்டதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்த வண்ணம் இருந்தது.


 



சி.பி.சி.ஐ.டி போலீசார் இறுதி அறிக்கை



வழக்கை முடித்த சிபிசிஐடி போலீசார்


இதனை தொடர்ந்து இந்த வழக்கு 2018 ஆம் ஆண்டு சிபிசிஐடி போலீசுக்கு மாற்றப்பட்டது. இதனை தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டனர். விசாரணை முடிவில் கொக்கி குமார் காவல்துறையினர் பிடிக்கும் முயன்ற பொழுது கால் தடுக்கி, 9 அடி உள்ள சரளை கற்கள் மற்றும் முண்டுகள் நிறைந்த பள்ளத்தில் கீழே விழுந்த பொழுது இறப்பிற்கு உண்டான தலைக்காயம் மற்றும் இடது முழங்காலத்திற்கு எலும்பு முறிவு ஆகியவை ஒன்று சேர ஏற்பட வாய்ப்பு உண்டு என்றும், கம்பியால் தாக்குதல் நடத்தி இருந்தால் வெளி காயம் ஏற்பட்டிருக்கும், வெளி காயம் ஏற்படவில்லை என்ற ஆவணங்களில் அடிப்படையில் குற்றங்கள் எதுவும் நடைபெறவில்லை மேல் வழக்கு தொடர வேண்டாம் என சிபிசிஐடி போலீசார் இறுதி அறிக்கையை கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சமர்ப்பித்தனர். 


கொக்கி குமார் -   வீரமணி


இந்த வழக்கை முடிக்க வேண்டும் என்ற ரீதியில் சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர். ஆனால் புகார் கொடுத்திருந்த பாண்டிமுத்து ஆஜராகவில்லை.‌ இந்தநிலையில் 2003 ஆம் ஆண்டு அயோத்திக்குப்பம் வீரமணியை வெள்ளதுரை கொன்றபோது, ​​மெரினா காவல் நிலைய முன்னாள் காவல் ஆய்வாளர் லாயிட் சந்திராவிடம் உள்துறை விசாரணை நடத்தியதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒருபுறம் கொக்கி குமார் வழக்கு, மறுபுறம் வீரமணி தொடர்பாக உள்துறை செயலகம் விசாரணை நடைபெற்ற நிலையில் வெள்ளத்துரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்