தமிழ்நாட்டின் நிதி நிலையை கடந்த ஆட்சி மோசமாக விட்டு சென்றுள்ளதாகவும், அதை சீர் செய்யும் நோக்கில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி கூறினார்.


கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் ஊரடங்கு பல்வேறு தளர்வுகளுடன், ஜூன் 21ஆம் தேதி காலை 6 மணி வரை நீட்டிக்கப்படுவதாக கடந்த 12ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். கொரோனா நோய்த் தொற்று தினசரி பாதிப்பு அதிகமுள்ள கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களைத்  தவிர்த்து இதர 27 மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்தன. 27 மாவட்டங்களில் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை டீ கடைகளை திறந்து பார்சல் முறையில் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி, டீ கடைகள் திறக்கப்பட்டன. அத்துடன் நீண்ட நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. மது குடிப்பவர்கள் நீண்ட வரிசையில் நின்று மதுவை வாங்கி சென்றனர். அதில் ஒருவர் மது பாட்டில்களுக்கு கற்பூரம் ஏற்றி ஆரத்தி எடுத்து அங்குள்ளவர்களை ஆச்சரியப்படுத்தினார்.




இந்நிலையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது ஏன் என்பது குறித்து வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி மதுரையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது விளக்கமளித்தார். அந்தப் பேட்டியில். “கொரோனா தொற்று நோய் பரவலின் தாக்கம் குறைந்து உள்ளது. அதனால் மது கடைகளை திறந்து உள்ளோம். தமிழ்நாட்டின் நிதி நிலையை கடந்த ஆட்சி மோசமாக விட்டு சென்றுள்ளது. அதை சீர் செய்யும் நோக்கிலும் மதுக்கடைகள் திறக்கப்பட்டு உள்ளன. பாஜக ஆளும் பல மாநிலங்களில் மதுக்கடைகள் திறந்து உள்ளன” என்றார்.


கொரோனா குறையும் வரை கட்டுப்பாடுகள் தொடர வேண்டும் -சென்னை உயர்நீதிமன்றம்


மேலும், மதுரையில் அமையவுள்ள கலைஞர் நூலகத்திற்கு இடம் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற உள்ளதாகவும், இதில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்துகொள்ள உள்ளதாகவும் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி கூறியுள்ளார். தமிழக அரசு மதுக்கடைகள் திறக்கப்படும் என்று அறிவித்ததற்கு பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.


முன்னதாக, “பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. போலி மது, கள்ள மது தமிழகத்தை சீரழித்துவிடக் கூடாது என்பதற்காகவே டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளில் கட்டுப்பாடுகள் மீறப்பட்டால் தளர்வுகள் திரும்பப் பெறப்படும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


TN Corona Management: கட்டுப்படுவோம்! கட்டுப்படுத்துவோம்! - முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை.!