புனிதமாக கருதப்படும் திருமாங்கல்ய கயிறை தொழிலாளிகள் விரதமிருந்து தயாரிப்பதாக நெகிழ்ச்சி பட தெரிவிக்கின்றனர். 


சிறப்புமிக்க திருமாங்கல்யம்


இந்துகளின் கலாச்சாரத்தில் திருமாங்கல்ய கயிறு மாற்ற நாள், கிழமை, நேரம் பார்த்து  தான் மாற்ற வேண்டும் என்ற ஐதீகம் உள்ளது. தாலிக் கயிறு மாற்றுவதற்கு சந்திர தரிசனம், சுபமுகூர்த்த நாள், மேல் நோக்கு நாள், சித்த யோகம், அமிர்த்த யோகம் என்று பல்வேறு விடயங்கள் கூடி வரக்கூடிய அம்சமான நாளாக இருக்க வேண்டும் என நம்பப்படுகிறது. மிக முக்கியமாக கயிறு மங்கும் தன்மை வந்தால் மட்டுமே அதை மாற்றவேண்டும். தாலிக்கயிற்றை புதிதாக மாற்ற திங்கள், செவ்வாய், வியாழக்கிழமைகளில் மட்டும் தான் மாற்ற வேண்டும்" என பல விசயங்களை நம்புகின்றனர். இப்படியான புனிதமாக கருதப்படும் திருமாங்கல்ய கயிறை தொழிலாளிகள் விரதமிருந்து தயாரிப்பதாக நெகிழ்ச்சி பட தெரிவிக்கின்றனர். 


கயிறு தயாரிப்பு தொழில் பிரதானம்


சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அடுத்த கசயனாபுரம், பனையூர் உள்ளிட்ட பகுதிகளில் முகூர்த்த மாதங்களை ஒட்டி கூலித் தொழிலாளர்கள் திருமாங்கல்ய கயிறு தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  கீழடி பகுதியில் உள்ள சயனாபுரம், பனையூர், சொட்டதட்டி உள்ளிட்ட கிராமங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்கள் மாங்கல்ய கயிறு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாடு மட்டுமல்லாது நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் இங்கிருந்து கயிறுகள் தயாரித்து அனுப்படுகிறது. சீசனுக்கு ஏற்றவாறு கயிறு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபடுகின்றனர். நவம்பர், டிசம்பர் மாதங்களில் பொங்கல் பண்டிகையை ஒட்டி ஆடு, மாடு, ஜல்லிகட்டு காளைகளுக்கான தேவையான கயிறு தயாரிப்பார்கள்.


பயபக்தியுடன் தயாராகும் மாங்கல்ய கயிறு


அதைப் போல் திருமண முகூர்த்த நாட்கள் வருவதால் திருமாங்கல்ய கயிறு தயாரிக்கும் பணியிலும் ஈடுபடுகின்றனர். நூல்கள் மொத்தமாக வாங்கி கூலி தொழிலாளர்களிடம் வழங்கி விடுகின்றனர். அதனை கயிறாக திரித்து விற்பனை செய்கின்றனர். சயனாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கருவேல மரங்களின் இடையே மெகா சைஸ் சக்கரம் பொருத்தில் அதனை கைகளால் சுழற்றி, சுழற்றி கயிறு தயாரிக்கின்றனர்.


தயாரிக்கும் கயிறுகளின் எடைக்கு ஏற்ப தொழிலாளர்களுக்கு கூலி வழங்கப்படுகிறது. மற்ற கயிறுகளை விட திருமாங்கல்ய கயிறு தயாரிக்கும்போது மட்டும் தொழிலாளர்கள் விரதமிருந்து பயபக்தியுடன் தயாரிக்கின்றனர்.


மன நிறைவை தரும் கயிறு தொழில்


தயாரிப்பாளர்கள் கூறும் போது,” திருமாங்கல்யத்தை சிலர் மஞ்சள் கயிரில் அணிகின்றனர். சிலர் தங்கத்தில் அணிகின்றனர். அந்த தாலி கயிற்றை வருடத்திற்கு 2 முறை மாற்றுவது வழக்கம். முக்கியமாக ஆடிப் பெருக்கு நாளில் மாற்றுவார்கள். மேலும் மற்ற நேரங்களில் பெரியவர்கள் ஆலோசனைப் படி மாங்கல்யம் மாற்றுவார்கள். திருமாங்கல்ய கயிறு என்பது ஒரு பெண்ணின் மனதை நிறைவு பெற செய்வது. காலம்காலமாக பெண்ணின் கழுத்தில் கிடக்கும் திருமாங்கல்ய கயிற்றை மனதில் எந்த வித கெட்ட எண்ணங்களும் இன்றி தயாரிக்கிறோம்.


மற்ற கயிறுகள் தயாரிப்பதை காட்டிலும் திருமாங்கல்ய கயிறு தயாரிக்கும் போது மன நிறைவு கிடைக்கும். தமிழகத்தில் சித்திரைத் திருவிழாவை தொடர்ந்து பல்வேறு கோயில்களில் திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். திருக்கல்யாண உற்சவத்தின் போது பக்தர்களுக்கு திருமாங்கல்ய கயிறு பிரசாதமாக வழங்கப்படும். அதற்காக கயிறு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்.


மழை காலங்களை தவிர மற்ற காலங்களில் கயிறு தயாரிப்பு பணி விறுவிறுப்பாக நடைபெறும் என்றனர். திருமாங்கல்ய கயிறு, ஜல்லிக்கட்டு காளை கயிறு தவிர விசைப்படகுகளை கட்ட பயன்படும் ராட்சத கயிறு, மின்வாரிய ஊழியர்கள் பயன்படுத்தும் கயிறு, தொட்டில் கயிறு என பல்வேறு கயிறுகள் வெள்ளை, ஊதா, சிவப்பு உள்ளிட்ட பல்வேறு நிறங்களில் தயாரித்து விற்பனைக்கு அனுப்புகின்றனர்” என தெரிவித்தனர்.


இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - 90ஸ் கிட்ஸ் ரியூனியன்: மதுரையில் அசர வைத்த அரசுப் பள்ளி முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் சந்திப்பு !