திண்டுக்கல் மாவட்டம் பழனி கோவிலுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வருகை தந்தார். கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட ஆளுநர் நேற்று மாலை பழனி கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய குடும்பத்துடன் வருகை தந்தார். கோவையில் இருந்து கார் மூலம் பழனிக்கு வருகை தந்த ஆளுநர் ரவியை மாவட்ட ஆட்சியர் பூங்கொடி, டிஐஜி அபினவ்குமார், திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
தொடர்ந்து மின்இழுவைரயில் மூலம் மலைக்கோவிலுக்கு மேலே சென்ற ஆளுநருக்கு பழனி திருக்கோவில் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து ஆளுநரை அதிகாரிகள் வரவேற்று கோவிலுக்கு அழைத்து சென்றனர். பழனி கோவிலில் நடைபெற்ற சாயரட்சை பூஜையில் கலந்துகொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி ராஜ அலங்காரத்தில் காட்சி அளித்த பழனியாண்டவரை தரிசனம் செய்தார். தொடர்ந்து போகர் ஜீவசமாதியில் வழிபாடு நடத்திய ஆளுநர் தங்கத்தேர் இழுத்து வழிபாடு செய்தார். சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் கோவைக்கு திரும்பினார்.
ஆளுநர் பழனி வருவதற்கு முன்பு அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி ஏந்தி விடுதலைச் சிறுத்தைகள், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் , திராவிடர் கழகம் கட்சியினர் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக ஆளுநர் ரவி சட்டமன்றத்தில் மக்கள் நலன் சார்ந்து நிறைவேற்றி அனுப்பிய நீட் தேர்வு ரத்து செய்வது உள்ளிட்ட பல தீர்மானங்களை கிடப்பில் போட்டுள்ளதாகவும், தமிழக நலம் சார்ந்து அரசியலுக்கும் திட்டங்களுக்கு எதிராக செயல்படுவதையும் கண்டித்து கருப்பு கொடி ஏந்தி எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிகழ்வை தொடர்ந்து ஆளுநரின் வருகை பாதுகாப்பிற்காக திண்டுக்கல் சரக உள் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.