தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தின் 5 நோக்கங்களை முதலமைச்சர் ஸ்டாலின் பட்டியலிட்டுள்ளார்.
காலை உணவு திட்டம்:
தமிழ்நாடு அரசின் அரசுப் பள்ளி மாணவர்களின் காலை உணவு திட்டத்தின் விரிவாக்கத்தை, நாகை மாவட்டம் திருக்குவளையில் உள்ள, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி படித்த பள்ளியில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது, மாணவர்களுடன் அமர்ந்து கிச்சடி உண்டு மகிழ்ந்ததோடு, அவரக்ளோடு உரையாடி பின்பு மாணவர்களுக்கு உணவும் பரிமாறினார்.
ஸ்டாலின் உரை:
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின் “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் என்பர். திமுக அரசு உயிர் கொடுத்துள்ளது. காலை உணவுத்திட்டத்தால் என் மனம் நிறைந்து மகிழ்கிறது. கலைஞர் படித்த பள்ளியில் இந்த திட்டத்தை தொடங்கி வைப்பதில் பெருமை அடைகிறேன். காலை உணவு திட்டத்தின் விரிவாக்கத்தால் 31 ஆயிரம் அரசுப்பள்ளிகளில் 17 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர். தொடக்கத்தில் குறிப்பிட்ட 1500 பள்ளிகளில் மட்டுமே இந்த திட்டம் செயல்படுத்தப்பட்ட நிலையில், தற்போது அனைத்து அரசுப்பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன் நோக்கம், மாணவர்கள் பசியின்றி பள்ளிக்கூடம் வர வேண்டும், ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படக்கூடாது, ரத்தசோகை என்ற குறைபாட்டை நீக்க வேண்டும், மாணவர்களின் வருகைப்பதிவு அதிகரிக்க வேண்டும், வேலைக்கு செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறக்க வேண்டும் என்பன ஆகும். இதன் மூலம் தமிழகம் எத்தனையோ நன்மைகளை பெற உள்ளது. எந்த காரணமும் கல்வி கற்க தடையாக இருக்கக் கூடாது என்பதில் திமுக உறுதியாக உள்ளது. அனைத்து அறிவையும், அனைத்து சமூகத்தினருக்கும் கொடுக்கும் ஆட்சியை நடத்தி கொண்டிருக்கிறோம். இந்த சூழலிலும் தேசிய கல்விக் கொள்கை எனும் பெயரிலும், நீட் எனும் பெயரிலும் தடுப்புச் சுவர் போடும் துரோக ஆச்சாரியார்கள் இருக்க தான் செய்கிறார்கள். ஏகலைவன் தனது கட்டைவிரலை காணிக்கையாக கொடுத்த காலம் எல்லாம் மலையேறிவிட்டது. இது துரோணாச்சியார்களின் காலம் கிடையாது. ஏகலவைர்களின் காலம். எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்கும் என்ற திராவிட இயல் கோட்பாடு கோலோச்சும் காலம். அண்ணா, பெரியார், கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களின் தடத்தை பின்பற்றி நடக்கிறேன். பலரது மகிழ்ச்சிக்கு காரணமாக நான் காரணமாக இருப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. மாணவர்கள், இளைஞர்களுக்கு பாடமாக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உள்ளார். மதிய உணவுதிட்டத்தை ஊட்டச்சத்து திட்டமாக மாற்றியவர் கருணாநிதி. காலை உணவுத்திட்டத்திற்கானது நிதி ஒதுக்கீடு அல்ல, நிதி முதலீடு. உதவ யாரும் இல்லை என கலங்கும் மக்களுக்கு திமுக அரசு உறுதுணையாக இருக்கும். நிலாவிற்கு சென்ற சந்திரயானை உருவாக்கிய முன்னாள் அரசுப்பள்ளி மாணவர்களை போன்று, எதிர்காலத்தில் நீங்களும் பல்வேறு சாதனைகளை படைத்து தமிழ்நாட்டிற்கு உலகளவில் பெருமை சேர்க்க வேண்டும். அதனை உங்கள் பெற்றோர் உடன் சேர்ந்து நானும் கண்டுகளிக்க வேண்டும்” என மாணவர்கள் மத்தியில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.