Chandrayaan 3 Update: நிலவில் சந்திரயான் 3 லேண்டரை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ள சந்திரயான் 2-வின் ஆர்பிட்டர்.
இஸ்ரோ வெளியிட்ட புகைப்படம்:
சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டர் திட்டமிட்டபடி வெற்றிகரமாக நேற்று முன்தினம் மாலை 6.04 மணியளவில் தரையிறக்கியது. இதன் பிறகு ஒவ்வொரு நாளும் புதிய புதிய அப்டேட்டுகளை இஸ்ரோ வெளியிட்டு வருகிறது. நேற்று கூட நிலவின் மேற்பரப்பின் காட்சிகளை இஸ்ரோ வெளியிட்டிருந்தது. அதில், நிலவின் பள்ளம், மேடுகள் உள்ளிட்டவை துல்லியமாக வீடியோவில் இடம்பெற்றுள்ளன. அதனை தொடர்ந்து, இன்று ஒரு அப்டேட்டை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. நிலவில் சந்திரயான் 3 லேண்டரை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது சந்திரயான் 2-வின் ஆர்பிட்டர். உயர தெளிவுத்திறன் கேமரா மூலம் எடுக்கப்பட்ட சந்திரயான் 3 லேண்டர் புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டிருக்கிறது. ஆனால், புகைப்படங்களை வெளியிட்ட சில நிமிடங்களிலேயே அதனை நீக்கியுள்ளது இஸ்ரோ என்பது குறிப்பிடத்தக்கது.
தரையிறங்கிய சந்திரயான் -3:
சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டர் திட்டமிட்டபடி வெற்றிகரமாக நேற்று முன்தினம் மாலை 6.04 மணியளவில் தரையிறக்கப்பட்டது. தொடர்ந்து 6 மணி நேரத்திற்குப் பிறகு லேண்டரில் இருந்து ரோவரை தரையிறங்கியது. இந்த பிரக்யான் ரோவர் சுமார் 14 நாட்கள் நிலவில் ஆய்வு மேற்கொள்ள உள்ளது. பிரக்யான் ரோவரின் வேகம் அதன் செயல்பாட்டை பாதித்துவிடக்கூடாது என்பதற்காக மெதுவாக செல்லும்படியே வடிவமைக்கப்பட்டுள்ளது. விக்ரம் லேண்டர் தரையிறங்கிய சுமார் 2 மணி நேரத்தில் பிரக்யான் ரோவர் தனது பணியை தொடங்கும் என்று ஏற்கனவே இஸ்ரோ அறிவித்திருந்தது. இதன்படி, தற்போது பிரக்யான் ரோவர் விக்ரம் லேண்டரில் இருந்து பிரிந்து தனது பணியை தொடங்கியுள்ளது. இதற்காக விக்ரம் லேண்டரில் சாய்வு தளம் வடிவமைக்கப்பட்டு இருந்தது.
அடுத்து என்ன நடக்கும்?
இந்த சாய்வு தளம் மூலமாக ரோவர் தரையிறக்கப்பட்டது. 6 சக்கரம் கொண்ட 26 கிலோ எடையிலான இந்த ரோவரில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த ரோவரின் ஆய்வு நாட்கள் 14 நாட்கள் ஆகும். இந்த ரோவர் நிலவில் சுமார் 100 மீட்டர் முதல் 500 மீட்டர் வரை செல்லும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. நொடிக்கு ஒரு சென்டி மீட்டர் தூரம் அளவிற்கு மட்டுமே இந்த ரோவர் பயணிக்கும். அப்போது நிலவில் உள்ள நீராதாரம், கனிம வளங்கள், நிலவின் அமைப்பு, தோற்றம் மற்றும் நிலவின் வளிமண்டலம் என பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆராயப்பட உள்ளன. அடுத்து வரும் 14 நாட்களில் நிலவில் கண்டுபிடிக்கப்படும் முக்கிய அம்சங்களை லேண்டர் படம்பிடித்து இஸ்ரோவிற்கு அனுப்பப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க