தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் சூரி. இவருக்கு மதுரையில் சொந்தமாக அம்மன் உணவகம் என்ற பெயரில் உணவகம் இயங்கி வருகிறது. இந்த உணவகத்தின் நிர்வாகத்தை சூரியின் சகோதரர்கள் கவனித்து வருகின்றனர். இந்த உணவகத்தில் வணிகவரித்துறையினர் நேற்று சோதனை நடத்தினர். மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள காமராஜர் சாலையில் இயங்கி வரும் சொந்தமான அம்மன் உணவகத்தில் உள்ள பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி இல்லாமல் கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையிலே நேற்று சூரிக்கு சொந்தமான உணவகத்தில் வணிகவரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.
வணிக வரித்துறையினர் நடத்திய சோதனையில் சூரிக்கு சொந்தமான உணவகத்தில் வாடிக்கையாளர்களுக்கான உணவுக்கட்டணத்தில் முறையாக ஜி.எஸ்.டி. வரி கட்டணம் வசூலிக்கப்படாதது தெரியவந்தது. மேலும், அதிகாரிகள் நடத்திய விசாரணையில் உணவகத்திற்காக வாங்கப்பட்ட பொருட்களுக்கு முறையாக ஆவணங்கள் இல்லாததும் தெரியவந்தது.
இதையடுத்து, இந்த புகார் தொடர்பாக அடுத்த 15 நாட்களுக்குள் வணிகவரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூரிக்கு சொந்தமான அம்மன் உணவகத்திற்கு ஏராளமான கிளைகள் உள்ளது.
மேலும் படிக்க : 'சூத்திரன் அல்லாத ஹெச்.ராஜாவிற்கு ஏன் கோபம் பொத்துக்கொண்டு வருகிறது?" - தொல்.திருமாவளவன் எம்.பி காட்டம்..
மதுரை அரசு மருத்துவமனை, ரிசர்வ் லைன் சந்திப்பு, ஊமச்சிகுளம், நரிமேடு, ஒத்தக்கடை, சுந்தர்ராஜன்பட்டி ஆகிய பகுதிகளிலும் சூரிக்கு சொந்தமாக உணவகம் இயங்கி வருகிறது. தற்போது, சோதனை நடைபெற்றுள்ள உணவகம் அவரது மற்ற உணவங்களுக்கான தலைமையிடமாக விளங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
1997ம் ஆண்டு முதல் திரைப்படங்களில் சிறு, சிறு வேடங்களில் நடித்து வந்த சூரி, வெண்ணிலா கபடிக்குழு படத்தில் பிரதான நகைச்சுவை நடிகராக நடித்தார். அந்த படத்தில் இடம்பெற்ற புரோட்டா நகைச்சுவைக்கு பிறகு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் பெற்றார். பின்னர், தமிழ் திரையுலகின் மிகப்பெரிய நடிகர்களான ரஜினிகாந்த், அஜீத், விஜய், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலருடன் நடித்து சூரி மிகவும் பிரபலம் ஆனார். மேலும், தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை எனும் படத்திலும் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : கரூர் அருகே பல்வேறு நோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவன் - தமிழக அரசு உதவ வேண்டும் என கண்ணீர் மல்க பெற்றோர் கோரிக்கை
மேலும் படிக்க : Nakkeeran Reporter attacked: பத்திரிகையாளர்களைத் தாக்கி உண்மைகளை மறைக்க முயல்வதா... சீமான் கடும் கண்டனம்!