ரத்தக் குழாயில் அடைப்பு, வலிப்பு நோய், கண் கருவிழி பாதிப்பு அடுத்தடுத்து பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வழியின்றி தவிக்கும் ஏழை சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கவும், காப்பாற்றவும் தமிழக அரசும், நல்ல உள்ளங்களும் முன்வர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளாது. கரூர் மாவட்டம், குளித்தலையை அடுத்த, தோகைமலை பஞ்சாயத்து நெசவாளர் காலனியைச் சேர்ந்தவர் பாலன், 40. பந்தல் அமைக்கும் கூலி தொழிலாளி. அவரது மனைவி சிரும்பாயி, 39. இவர்களுக்கு கோபிநாத், 16, என்ற மகனும், விஜயலட்சுமி, 17 என்ற மகளும் உள்ளனர்.




தோகைமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார் கோபிநாத். சில ஆண்டுகளுக்கு முன் அவருக்கு திடீர் உடல்நல குறைவால், திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்துச் சென்றனர். அப்போது, ரத்தக்குழாயில் அடைப்பு இருப்பதாக கூறி தொடர் மருத்துவம் மேற்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இதை அடுத்து பாலன் குடும்பத்தினர், கோபிநாத்தை கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளனர். அதன் பிறகும் கோபிநாத்துக்கு அவ்வப்போது வலிப்பு ஏற்பட்டதால், திருச்சி, மதுரை என பல்வேறு மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளனர்.




இதற்காக தங்களிடம் இருந்த, நிலம், நகைகள் என அனைத்தையும் விற்று 10 லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளனர். தற்போது வரை அவரது உடல் நலம் சீராகவில்லை. தற்போது பணமில்லாமல், கோபிநாத்திற்கு தொடர் சிகிச்சை மேற்கொள்ள முடியாமல் வீட்டில் வைத்து கவனித்து வருகின்றனர். இந்நிலையில் கோபிநாத்துக்கு சமீபத்தில் மீண்டும் வலிப்பு ஏற்பட்டு அதன் பக்கவிளைவால் அவரது கண் கருவிழி மேலே ஏறிவிட்டது. அவரது கண் பகுதியில் கட்டு போடப்பட்டு, பார்வை இழந்து, மிகவும் பரிதாபமான நிலையில் உள்ளார்.




நன்றாக பேசிக் கொண்டிருந்த கோபிநாத் தற்போது, ஏதும் பேச முடியாமல், எதை கேட்டாலும் பதில் சொல்லாமல், படுத்த படுக்கையாக இருப்பது அவரது குடும்பத்தினரை மிகுந்த வேதனைக்கு ஆளாக்கியுள்ளது. மணப்பாறை தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பயின்று வந்த அவரது அக்கா விஜயலட்சுமி, தற்போது படிப்பை விட்டு விட்டு, தன் தம்பியின் அருகில் இருந்து கவனித்து வருகிறார். வேலைக்குச் சென்றால்தான் ஒரு வேலை உணவு என்ற நிலையில், தந்தை, தாய், அக்கா என மூவரும் வீட்டில் முடங்கி, கோபிநாத்தை கவனித்து வருகின்றனர். இதனால், அவர்களும் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.




கோபிநாத்தின் அக்கா விஜயலட்சுமி கூறுகையில், "இது போன்ற விசித்திரமான நோய்களால் பாதிக்கப்பட்ட பலரையும் அழைத்துச் சென்று உயரிய சிகிச்சை அளித்து குணப்படுத்தி, மீண்டும் இயல்பு நிலையில் வாழும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அது போன்று என் தம்பிக்கும் மருத்துவ சிகிச்சை அளித்து, நாங்கள் இருவரும் தடையின்றி கல்வியை தொடர அரசு எங்களுக்கு உதவ வேண்டும்" என்றார் கண்ணீர் மல்க. தந்தை பாலன் கூறுகையில், இதற்கு மேலும் விற்பதற்கு என்னிடம் ஏதுமில்லை. எப்படியாவது என் மகனை காப்பாற்றுங்கள் என்று கண்ணீர் மல்க கூறினார். ஏழை மாணவன் கோபிநாத்துக்கு உரிய சிகிச்சை அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏழை குடும்பத்துக்கு உதவவும், சிறுவனைக் காப்பாற்றவும் உதவ நினைக்கும் நல்ல உள்ளங்கள் 8525010971 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.