கொரோனா நோய் தொற்றை கட்டுக்குள் கொண்டுவருவதற்குத் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை போர்கால அடிப்படையில் எடுத்துவருகிறது. கொரோனா பாதிப்பு தமிழகத்தில், தலைநகரை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தது கோவை. முழு ஊரடங்கு நீட்டிப்பை தொடர்ந்து பல மாவட்டங்களில் கொரோனாவின் தாக்கும் லேசாக குறைந்துவருகிறது. தென்மாவட்டங்களில் குறிப்பாக மதுரை மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று மட்டும் 633 நபர்கள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த மார்ச் 15 முதல் நேற்றுவரை மொத்தம் 44152 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் மொத்தம் 28566 நபர்கள் குணமடைந்துள்ளனர். உயிரிழப்பின் எண்ணிக்கை 468 ஆக அதிகரித்துள்ளது. இந்த சூழலில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தனியார் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்த 29 ஆயுஷ் மருத்துவர்கள் எவ்வித முன் அறிவிப்பும் இல்லாமல் பணி நீக்கம் செய்யப்பட்டது பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது.
இது குறித்து பாதிக்கப்பட்ட மருத்துவர் சுதா நம்மிடம்..." கடந்த ஜூலை மாதம் தனியார் நிறுவனத்தின் மூலம் அரசு இராசாசி மருத்துவமனையில் பணி அமர்த்தப்பட்டோம். கொரோனா முதல் மற்றும் இரண்டாவது அலையில் தீவிரத்தை அறிந்தும் உயிரை பணயம் வைத்து வேலை செய்தோம். கிட்டதட்ட 11 மாதங்கள் இரவு பகலாக கொரோனா வார்டில் வேலை செய்த நிலையில் நேற்று காலையில் நீங்கள் பணிக்கு வரவேண்டாம், உங்கள் சேவைக்கு நன்றி என தெரிவித்துவிட்டனர். 4 மாதங்கள் ஊதியம் கிடைக்காத சூழலிலும் சேவை மனப்பான்மையோடு தொடர்ந்து பணி செய்த எங்களுக்கு குறிப்பிட்ட கால கெடு கூட வழங்காமல் திடீர் என்று பணிக்கு வரவேண்டாம் என தெரிவித்துவிட்டனர். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் நிற்கிறோம்.
எங்களில் பலரும் தனியார் மருத்துவமனையில் வேலை செய்தோம், மருத்துவ மேல் படிப்பிற்கு தயராகி வந்தோம் இந்த சூழலில் கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்த வேண்டும் என அரசு அழைத்ததால் எங்கள் மருத்துவ பணியை நிறுத்திவிட்டு அரசு மருத்துவமனையில் வேலை செய்தோம். தற்போது 80 எம்.பி.பி.எஸ் புதிய மருத்துவர்களை பணியில் சேர்த்ததால் எங்களை வீட்டுக்கு அனுப்புகின்றனர். ஆயுஷ் மருத்துவர் என்பதை தாண்டி நோயாளிகளுக்கு கூடுதலாக உதவி செய்தோம். ஒவ்வொரு நோயாளியையும் தனித்தனியாக கவனித்துக் கொண்டோம்.
மேலும் படிக்க - 2 -டி.ஜி மருந்து கொரோனாவிற்கு வரப்பிரசாதம்; பரிசோதனை செய்த செங்கல்பட்டு டாக்டர் பெருமிதம்!
6 மணி நேரத்தில் 150 நோயாளிகளை சந்தித்து சிகிச்சை அளித்தோம். இப்படி இருக்கும் போது எங்களை வேண்டாம் என்று சொல்வது எப்படி நியாயம். நாங்கள் எங்கே போவோம். எங்களுக்கு என்று குறிப்பிட்ட காலம் ஒதுக்கி பணியில் இருந்து விடுவித்தால் பிற வேலைக்கு சென்றிருப்போம். ஆனால் இப்படியான அசாதாரண சூழலில் அனுப்புவது முறையல்ல. எனவே தமிழக முதல்வர் இதனை கவனத்தில் எடுத்து உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்" என்றார்.
மற்றொரு ஆயுஷ் மருத்துவர் ...," அவுட் சோர்சிங் என்பதால் எங்களை திடீர் என்று அனுப்பிவிட்டனர். 11 மாதம் நாங்கள் பிற பணிகளை விட்டு கொரோனா சிறப்பு பணி செய்தோம். தென்மாவட்டங்களில் பெரிய மருத்துவமனையான இராசாசி மருத்துவமனையில் பணி செய்தது பல்வேறு அனுபவங்களை கொடுத்துள்ளது. ஒவ்வொரு கொரோனா நோயாளிகளை எப்படி கையாள வேண்டும் என்பதை களத்தில் முழுமையாக கற்றுக் கொண்ட சூழலில் எந்த ஒரு கால அவகாசமும் கொடுக்காமல் விடுவித்துவிட்டனர்., இது ஏற்புடையதல்ல. கொரோனா முழுமையாக குறைந்த பின்னர் தான் விடுவிப்போம் என்று சொன்னார்கள். ஆனால் 80 புது மருத்துவர்கள் கிடைத்துவிட்டதால் எங்களை வீட்டிற்கு அனுப்புகின்றனர். அரசு எங்களின் சூழலை உணர்ந்து உதவி செய்ய வேண்டும்" என்றார்.
மேலும் படிக்க - https://tamil.abplive.com/news/tamil-nadu/madurai-area-man-arrest-and-fine-for-wrong-video-4298/amp