கொரோனா வைரஸுக்கு அரிதான மருந்து எனக்கூறி, சாக்கடை அருகே கிடந்த பாம்பை கடித்து ருசித்து சாப்பிட்ட நபரின் வீடியோ வைரலானதைத் தொடர்ந்து ரூ.7500 அபராதம் விதித்து வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.



பாம்பை சாப்பிடும் போதை ஆசாமி


 



கோரமுகம் கொண்ட கொரோனா உலக நாடுகளை தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. இந்தியா தற்போது அதிக தொற்று பாதிக்கப்பட்ட பட்டியலில் உள்ளது. தற்போது நிலவரப்படி கடந்த 24 மணிநேரத்தில் மட்டும்  2,11,298 பேருக்கு கொரோனா தொற்று பாதுகாக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. இதன் காரணமாக, இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 2,73,69,093 என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது. நாட்டில்  கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 3,15,235-ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் தமிழகத்தில் இன்றைய தினம் மட்டும்  33,361 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 



 

 

தமிழகத்தில் இதுவரை 19,78,621 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 474 பேர் பலியாகியுள்ளனர். தமிழகத்தின் மொத்த பலி எண்ணிக்கை 22,289-ஆக உள்ளது. சென்னையில் ஒரு நாள் பாதிப்பு 2,779 -ஆகப் பதிவாகியிருக்கிறது. அதே நேரம் திருப்பூரில் 2074  ஒரேநாளில் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவையில் 4,734 பேர் பாதிக்கப்பட்டுள்ளனரர். தமிழகத்தில் ஒரே நாளில் 30,063 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒரே நாளில் 1,64,124 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்து வருகிறது. இப்படியான இக்கட்டான சூழலில் கொரோனா தொடர்பாக பல்வேறு இடங்களில் அதிகளவு தவறான தகவல் பரவி வருகிறது. இந்நிலையில் மதுரையை சேர்ந்த போதை ஆசாமி ஒருவர் சாக்கடையில் கிடந்த பாம்பை சாப்பிட்டு கொரோனாவிற்கு இது தான் மருந்து என தெரிவித்து வெளியிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 



 

மதுரை வாடிப்பட்டி அடுத்த  பெருமாள்பட்டி எனும் கிராமத்தைச் சேர்ந்த வடிவேலு, அப்பகுதியில் சாக்கடை அருகே  கிடந்த பாம்பு ஒன்றினை  பிடித்து கொரோனா நோய்க்கு அரிய மருந்து எனக் கூறிக் கொண்டே அதனை கடித்து சாப்பிட்டதோடு, அந்தப்பாம்பை முழுவதுமாக வாயில் போட்டு மெள்ளும் காட்சிகள் பார்ப்பவரை அதிர்ச்சியடைய வைத்தது. இறந்த சில மணி நேரமான பாம்பை ஏதோ வேகவைத்த கோழி இறைச்சி சாப்பிடுவதை போல  சாப்பிட்டுக்கொண்டே அதற்கு விளக்கம் அளித்தவாறும் வீடியோவில் பேசிய காட்சிகளும், மேலும் தான் பாம்பு சாப்பிடுவதை பார்த்துவிட்டு, கிராம மக்களும் சாப்பிடலாம் என கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. வடிவேலு பாம்பை சாப்பிட்டுக்கொண்டே பேச, இதனை மற்றொரு நபர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்து வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டது.

 



 

இந்நிலையில் வீடியோவில் பேசிய  கட்டிட தொழிலாளர் வடிவேலுவை சோழவந்தான் வனச்சரகர் முருகன் தலைமையிலான வனத்துறையினர் பெருமாள்பட்டிக்கு விரைந்த சென்று, பாம்பு கறியை கொரோனா மருந்து என்ற தவறான தகவலை சமூக வலைதளங்களில் பரப்பிய குற்றத்திற்காகவும், பாம்பை சாப்பிட்ட குற்றத்திற்காகவும் வடிவேலுவை கைது செய்தனர். 



 

மேலும் கொரோனாவுக்கு பாம்பு கறி மருந்து என தவறான தகவல் அளித்து வீடியோ வெளியிட்ட குற்றத்திற்காகவும், பாம்பை பிடித்து கடித்து தின்ற குற்றத்திற்காகவும் வனத்துறை சட்டவிதிகளின்படி ரூ.7500 அபராதம் விதித்தும் இனி தவறு செய்யமாட்டேன் எனக்கூற வைத்து எச்சரிக்கை செய்து வனத்துறையினர் வடிவேலுவை விடுவித்துள்ளனர்.

 

இது குறித்து வன அலுவலர் முருகன் நம்மிடம் கூறுகையில், "கூலித் தொழிலாளி வடிவேலு குடிபோதையில் இறந்துகிடந்த பாம்பினை சாப்பிட்டு, வெளியிட்ட  வீடியோ வைரலானது. அதிகாரிகள் பார்வைக்கு செல்ல அவர்மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு வந்தது. அதனை தொடர்ந்து உடனடியாக அவரை கைது செய்து, விசாரணை நடத்தினோம். இது போன்ற தவறுகளை செய்யமாட்டேன் என உறுதியளித்ததை தொடர்ந்து அவருக்கு அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பியுள்ளோம்" என்றார்.