தமிழ்நாடு வரலாற்றில் தனக்கென தனி முத்திரை பதித்த மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர் கி.பி.1636ல் கட்டிய மஹால், இன்றும் அவரது பெயரில் கம்பீரமாய் நாயக்கர் ஆட்சியின் கட்டடக் கலைக்கு சாட்சியாக நின்று கொண்டிருக்கிறது. இத்தாலிய கட்டிட கலைஞரால் வடிவமைக்கப்பட்டு திருமலைநாயக்கரின் ரசணையில் உருவான இந்த பிரமாண்ட மாளிகை, ஆங்கிலேயர் ஆட்சியில் 1860-ல் புதுப்பிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதன் பின் 1971-ம் ஆண்டு தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டு, இன்று வரை மதுரை வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு கண்களுக்கு விருந்தளித்து வருகிறது.
நூற்றாண்டுகளை கடந்த இந்த வரலாற்று பொக்கிஷம் அதிக அளவிலான மனித வருகையால் சிதிலமடைய துவங்கியது. குறிப்பாக கட்டடத்தை சுமந்து நிற்கும் 58 அடி உயரம் கொண்ட 248 தூண்களும், மேல் மாடமும் சேதம் மற்றும் விரிசல் அடையத்துவங்கின. இதைத் தொடர்து ஆசிய வங்கி உதவியுடன் 3 கோடி ரூபாய் செலவில் திருமலை நாயக்கர் மஹாலை புதுப்பிக்க முடிவு செய்தனர். கொரோனா முதல் அலையின் போது ஊரடங்கு காரணமாக அப்பணி தாமதமான நிலையில் அதற்கு முன்பாக சிமெண்ட் மூலம் மேற்கொண்ட பணி பலனளிக்காததால், கட்டடம் கட்டப்பட்ட அதே முறையில் புதுப்பிக்க முடிவு செய்தனர்.
மதுரை உணவுகள் குறித்த கட்டுரை படிக்க இங்கே கிளிக் செய்யவும் - ஒருவர் கை பக்குவத்தில் ஊரே சமைக்கும் எண்ணெய் சுக்கா! இது தான் மதுரையோடு பக்கா!
பனை கருப்பட்டிப்பால் மற்றும் கடுக்காய் பொடி கரைசலும் சேர்க்கப்பட்டு பூச்சுப்பணி செய்யப்பட்டது. 50 கிலோ கருப்பட்டி பாலுக்கு 25 கிலோ கடுக்காய் பொடி வீதம் கரைசல் தயார் செய்யப்பட்டு தனித்தனி கேன்களில் அவை சேகரிக்கப்பட்டு அதன் பின்பாக கட்டுமானப்பணி நடைபெற்றது. இதற்காக அப்பணியில் தேர்ச்சி பெற்ற ஏழாயிரம் பண்ணையை சேர்ந்த கட்டுமானப் பணியாளர்கள் பயன்படுத்தப்பட்டார்கள். மஹால் உருவாக்கப்பட்ட அதே விதத்தில் நடைபெறும் இந்த புதுப்பிக்கும் பணியால் அடுத்த 50 ஆண்டுகளுக்கு மஹாலின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது என தெரிவித்தனர்.
தற்போது தமிழ்நாடு அரசு கூடுதல் தளர்வுகள் அறிவித்துள்ளதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஒலி, ஒளி காட்சியை கண்டு களிக்கும் விதமாக இன்று முதல் ஒலி, ஒளி காட்சிகள் மாலை 6.45 மணி முதல் 7.35 மணி வரை ஆங்கிலத்திலும் மற்றும் மாலை 8.00 மணி முதல் 8.50 மணி வரை தமிழிலும் நடைபெறவுள்ளது, என மதுரை ஆட்சியர் அனிஷ்சேகர் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - ”ஒரு விழிப்புணர்வுதான்” - பூக்கடைக்காரர் மோகன்: மதுரையில் மணக்கும் மல்லிகைப்பூ மாஸ்க் !