ஸ்மார்ட் சிட்டி திட்டம் என்பது நாட்டில் 100 நகரங்களை தேர்ந்தெடுத்து, அந்த நகரங்களை அனைத்து தேவையான வசதிகளுடன் இருக்கும் நகரமாக மாற்றம் அடையச் செய்வதே. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை  பிரதமர் மோடி கடந்த 2016-ஆம் ஆண்டு துவங்கி வைத்தார். வளர்ந்த நாடுகளில் உள்ள ஸ்மார்ட் சிட்டி நகரங்களைப் போல, இந்தியாவில் உள்ள நகரங்களையும் மாற்ற வேண்டும் என்பது தான் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம். இந்த திட்டம் பிரதமர் நரேந்திர மோடியின் பெட் திட்டமாகும். இந்த திட்டத்தின் கீழ், தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நகரங்களுக்கு உலகத் தரம் வாய்ந்த, உள்கட்டமைப்பு வசதிகள் கிடைக்கும். சுத்தமான குடிநீர், மின்சார விநியோகம், தரமான சாலைகள், அதிவேக,  தானியங்கி திடக்கழிவு மேலாண்மை, சிறப்பான பொது போக்குவரத்து, கணினி மயமாக்கப்படல் என்று பல்வேறு திட்டங்கள் இதில் அடக்கம். 



மதுரையில் சுமார் 920 கோடி மதிப்பில் கிட்டத்தட்ட 13 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 159.70 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பெரியார் பேருந்து நிலைய கட்டிட பணிகள் நடைபெற்று வருகிறது. இத்திட்ட பணிகளை மதுரை மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன், மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து பணிகளை விரைவுபடுத்துமாறு பொறியாளர்களுக்கு அறிவுரை வழங்கினர்.  பெரியார் பேருந்து நிலைய விரிவாக்க மற்றும் புதுப்பித்தல் பணிகள் குறித்தும் மதுரை எம்.பி.வெங்கடேசன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

 

பின்னர் சு.வெங்கடேஷன் செய்தியாளர்களிடம்...,” பெரியார் பேருந்து நிலைய புதுப்பித்தல் மற்றும் விரிவாக்க பணி முக்கியமான ஒன்று. திட்டமிடப்பட்ட காலத்தை விட ஸ்மார்ட் சிட்டி பணிகள் கூடுதல் கால அளவை எடுத்துக்கொண்டன. கால தாமதமாகவே ஸ்மார்ட் சிட்டி பணிகள் மேற்கொள்ளப்பட்டன.



ஸ்மார்ட் சிட்டி பணிகளால் மக்கள் மிகப்பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். ஒரு மாத காலத்திற்குள் பெரியார் பேருந்து நிலைய பணிகள் நிறைவடையும். பெரியார் பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டுள்ள மூன்று தளங்களும், வணிக கடைகளின் கட்டுமானங்களும் விமர்சனத்திற்குரியது. இது மக்கள் பயன்பாட்டுக்கு உரியதா என்ற கேள்வியும் எழுந்தது. தற்போதைய அதிகாரிகள் அதனை சரி செய்யும் வகையில் செயல்பட்டு வருகின்றனர். அதிகாரிகளின் நடவடிக்கையால் ஒரு சில குறைபாடுகள் சரி செய்யப்பட்டு வருகின்றன. மதுரை ரயில் நிலையத்தில் இருந்து பேருந்து நிலையம் வருவதற்கு சுரங்கப்பாதை அமைக்க திட்ட அறிக்கை ரயில்வே துறையினரால் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் போக்குவரத்து ரயில் பயணிகள் நேரடியாக பேருந்து நிலையத்திற்கு வர வசதி ஏற்படும். பெரியார் பாலத்திற்கு புதிய இணைப்பு ஏற்படுத்தப்பட்டு ஒரு வழிப்பாதையாக மாற்றப்படும். இதன் மூலம் மதுரை மாநகரில் போக்குவரத்து நெரிசல் குறையும். ஒட்டுமொத்த ஸ்மார்ட் சிட்டி பிரச்னைகள் குறித்து கடந்த ஆட்சியிலும் பேசியுள்ளோம்.



உடனடியாக பெரியார் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வர வேண்டியுள்ளது. பெரியார் பேருந்து நிலையத்தின் கட்டுமான தரம் சம்மந்தப்பட்டு ஆய்வு செய்ய வேண்டி உள்ளது. சட்டமன்ற கூட்டத்தொடர் முடிந்ததும் ஸ்மார்ட் சிட்டி ஆய்வு குழுக்கூட்டம் நடைபெறும். ஏற்கனவே ஸ்மார்ட் சிட்டி பணிகள் குறித்து அதிகாரிகளிடம், திட்ட அலுவலர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.  ஏற்கனவே பெரியார் பேருந்து நிலையத்திற்கு பெயர் உள்ளது. தற்போது பெரியார் பேருந்து நிலையத்திற்கு பெயர் மாற்ற வேண்டிய பிரச்னை எழவில்லை. ஒட்டுமொத்த ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் நோக்கம் மக்கள் பயனடைய வேண்டும் என்பதாக இருக்க வேண்டும். ஸ்மார்ட் சிட்டி என்பது வணிக பயன்பாடு சார்ந்த விடயமல்ல. மக்களின் நலன் சார்ந்த பயனுக்குரியதாய் இருக்க வேண்டும்.



ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்ட நிலையில், மதுரையில் 58 % மக்கள் பொதுப்போக்குவரத்தை அதிகப்படுத்த வேண்டும் என கருத்து கூறியுள்ளனர். அதற்கேற்ற கட்டமைப்புகளை மதுரையில் உருவாக்க வேண்டும். பயணிகள் பயன்பாட்டுக்குரிய இடமாக பெரியார் பேருந்து நிலையம் மாற்றப்படும். ஸ்மார்ட் சிட்டி குறித்து மீண்டும் மீண்டும் கேள்விகளை எழுப்பி விமர்சனம் செய்து விவாதம் செய்தவன் நான். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தால் அரசியல்வாதிகள் யார் பயனடைந்தார்கள் என்பது குறித்தும் விவாதிக்கலாம். கடந்த கால ஆட்சியாளர்கள் திட்டமிடப்பட்டு வர்த்தக நோக்கோடு உருவாக்கப்பட்ட இத்திட்டத்தால் கடைகளின் எண்ணிக்கை  அதிகரித்துள்ளது” எனத் தெரிவித்தார்