சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகளால் விபத்து ஏற்படுவதாக செய்தி வெளியான நிலையில், சிவகங்கை அருகே கால்நடைகளுக்கு கோசாலை அமைக்க 6 ஏக்கர் நிலத்தை அரசிற்கு தானமாக தருவதாக விவசாயி அறிவிப்பு.


சிவகங்கை நகர் பகுதியில் சுற்றித் திரிகின்றன, முக்கிய வீதிகளில் கால்நடைகள் அமர்ந்து கொண்டு பொதுமக்களை அச்சுறுத்துவதும் போக்குவரத்திற்கு இடையூறாகவும் இருக்கின்றன. அவ்வப்போது சாலை விபத்துக்கள் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் பலர் காயம் அடைவதும், சிலருக்கு உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது. இது தொடர்பாக பல்வேறு புகார்கள் சென்றாளும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை. 


 






இதுகுறித்தான செய்தி வெளியான நிலையில் இதனை கண்ட காளையார் கோவில் அடுத்துள்ள கருங்குளத்தை சேர்ந்த விவசாயி முருகேசன், தனக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலத்தை கால்நடைகளை வைத்து பராமரிக்கும் விதமாக கோசாலை அமைக்க தனக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலத்தை அரசுக்கு தானமாக வழங்குவதாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே முருகேசன் குடும்பத்தினர் கீழ்த்தட்டு மக்களின் நிலை உயர சுமார் 8 ஏக்கர் நிலம் தானமாக வழங்கி உள்ள நிலையில் தற்போது கால்நடைகளுக்காக 6 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.




இதுகுறித்து கருங்குளம் விவசாயி முருகேசன் நம்மிடம் பேசுகையில்..,” நாங்கள் பரம்பரை விவசாயிகள். தொடர்ந்து விவசாய பணிகளும் பல்வேறு தொழில்களும் செய்து வருகிறோம். பூமிதானம் இயக்கத்தின் கீழ் எங்கள் குடும்பத்தினர் 8 ஏக்கர் நிலத்தை கொடுத்துள்ளனர். தற்போது நான் 6 ஏக்கர் நிலத்தை தானமாக அரசுக்கு வழங்க விரும்பம் தெரிவித்துள்ளேன். இதனால் சாலையில் சுற்றித்திரியும்  மாடுகளுக்கு அடைக்கலமாக கோசாலை அமையும் என ஆசைப்படுகிறேன். இதனால் மாடுகளுக்கு சிறந்த உணவும் அதன் மூலம் வருவாயும் கிடைக்கும். அதே போல் பொதுமக்களுக்கு இடையூறு குறைந்து விபத்துக்களும் தடுக்கப்படும். இதனால் சிவகங்கை மாவட்ட நிர்வாகம் என்னுடை 6 ஏக்கர் நிலத்தைப் பெற்று கோசாலை அமைக்க வேண்டும். தொடர்ந்து நான் விவசாயம் செய்து வருகிறேன். அல்போன்ஷா ரக மாம்பலத்தை அதிகளவு விளைவித்து விருது பெற்றுள்ளேன். இதே போல் பல்வேறு விவசாய பணிக்காக மத்திய - மாநில அரசுகளிடம் விருது பெற்றுள்ளேன்" என்று பெருமையுடன் தெரிவித்தார்.




சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகளால் விபத்து ஏற்படுவதாக செய்தி வெளியான நிலையில், சிவகங்கை விவசாயி முருகேசன் கால்நடைகளுக்கு கோசாலை அமைக்க 6 ஏக்கர் நிலத்தை அரசிற்கு தானமாக தருவதாக விவசாயி அறிவிப்பு செய்தது சிவகங்கை மாவட்ட சமூக ஆர்வலர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இந்த இடத்தை பெற்று சாலையில் சுற்றித்தியும் மாடுகளுக்கு கோசாலை அமைக்க வேண்டும் என தெரிவித்தனர்.


மேலும் சென்னை தொடர்பான செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Cyclone Michaung: ”சென்னையில் 80 சதவீதம் மின் விநியோகம் சரி செய்யப்பட்டுள்ளது" - தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா