சென்னையில் வரலாறு காணாத கனமழை:
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில், கடந்த ஞாயிறு இரவு தொடங்கி நேற்று இரவு வரை கனமழை கொட்டி தீர்த்தது. கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. சென்னையில் மாநகரின் செயல்பாடு என்பதே பெரும்பாலும் ஸ்தம்பித்துள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. சென்னையில் கடந்த 45 மணி நேரத்தில் 47 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக காட்டுப்பாக்கம் - 29 செ.மீ., நுங்கம்பாக்கம் - 24 செ.மீ., மீனம்பாக்கம் - 19 செ.மீ. மழை பெய்துள்ளது.
மழைநீர் சூந்துள்ள பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் சிக்கியவர்களை மீட்பது, முகாம்களுக்கு கொண்டு செல்வது, தேவையான மருத்துவ உதவிகளை வழங்குவது, அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பது போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர் மற்றும் ராணுவத்தினரும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மறுமுனையில், தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றுவது, சாலையில் முறிந்து விழுந்த மரங்களை வெட்டி அகற்றுவது, மின்சார விநியோகத்தை மீண்டும் தொடங்குவது போன்ற பணிகளும் நடைபெற்று வருகின்றன.
"80 சதவீத இடங்களில் மின் விநியோகம்”
சென்னை தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "42 மணி நேரம் பெய்த மழையால் சென்னையில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 3 மாதங்களில் பெய்யும் மழை 2 நாட்களில் பெய்துள்ளது. மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, மேடவாக்கம் ஆகிய பகுதிகளில் தான் அதிக அளவு மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டை விட இந்த ஆண்டு பரவலாக அதிக மழை பெய்துள்ளது. 2015ஆம் ஆண்டு தென் சென்னையில் மட்டுமே அதிக அளவில் மழை பதிவானது. வெள்ளதால் பாதிக்கப்பட்ட 32,188 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் 3 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளனர். 1000 மோட்டார்கள் கொண்டு நீர் அகற்றம் பணி நடைபெற்று வருகிறது. சில இடங்களில் மழைநீர் 2 அல்லது 3 நாட்களில் மெல்ல மெல்ல வடிந்துவிடும். சென்னையில் விரைவில் இயல்பு நிலை திரும்ப தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கரணை, வேளச்சேரி, மடிப்பாக்கம் பகுதி மக்களுககு படகு மூலம் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மழையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்க 139 படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 4 மாவட்டங்களில் மழை பாதித்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு 3.5 லட்சம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. சென்னையில் பெய்த கனமழையால் 1,200 படகுகள் சேதம் அடைந்துள்ளன. சென்னையில் இன்னும் சில பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளன. தேங்கிய மழைநீர் குறைய தொடங்கியதும், மீதமுள்ள பகுதிகளில் மின் விநியோகம் கொடுக்கப்படும். தற்போது வரை 80 சதவீத இடங்களில் மின் விநியோகம் செய்யப்பட்டுள்ளது” என்றார்.
"70 சதவீத தொலைத்தொடர்பு சீரமைக்கப்பட்டுள்ளது”
தொடர்ந்து பேசிய அவர், "சென்னை முழுவதும் தற்போது 800 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சில இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளதால் 30 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. மழைநீர் குறைந்ததும் பேருந்து சேவைகள் முழுவதுமாக இயக்கப்படும். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய இடங்களில் 70 சதவீத தொலைத்தொடர்பு சீரமைக்கப்பட்டுள்ளது. இன்னும் 30 சதவீத தொலைத்தொடர்பு சீரமைப்பு பணிகளும் முடிவடைந்து விரைவில் வழங்கப்படும். மேலும், மழை பாதித்த பகுதிகளில் ஆவின் நிறுவன பால் விநியோகம் சீராக கொடுக்கப்படுகிறது. சென்னை மாநகராட்சி சார்பில் 1.26 லட்சம் பால் பாக்கெட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளது” என்றார் சிவ்தாஸ் மீனா.