மஞ்சுவிரட்டு போட்டியில்  காளையை அவிழ்த்து விடுவது தொடர்பாக நடந்த தகராறில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அண்ணன், தம்பி  வெட்டிக்கொலை. சகோதரர்கள் கொலையில் பெண் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

மஞ்சுவிரட்டுப் போட்டியில் தகராறு

 

சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகே பனங்குடியில்  நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில், மதுரை மாவட்டம், நாச்சிகுளத்தைச் சேர்ந்த ஆண்டிச்சாமி மகன்கள் ஜெயசூர்யா, சுபாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்பொழுது  அரண்மனை சிறுவயலைச் சேர்ந்த வல்லவன் மகன் ராஜேஷ்(19), சாத்தரசன்பட்டி சிவாஜி மகன் நவீன்(19), கிளுவச்சி முத்துமணி மகன் அஜய்(20) ஆகியோர்கள்  மஞ்சுவிரட்டில்   காளையை அவிழ்த்து விட்டனர். சிவகங்கை புதுப்பட்டி சக்தி மகன் மதன்(20)  என்பவரின் நண்பர்கள் அந்தக் காளையை பிடித்துள்ளனர். இதில் இருதரப்பிற்கும் வாய் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். 

 


 

கொலையில் முடிந்த தகராறு

 

இச்சம்பவம் தொடர்பாக ஏற்பட்ட விரோதத்துடன் இருந்த மதன் மற்றும் அவரது நண்பர்கள் 8 பேர் கடந்த 30-ம் தேதி இரவு இரு சக்கர வாகனங்களில் காளையார்கோவில் பகுதி தைல மர காட்டுக்குள்  மஞ்சுவிரட்டு காளையுடன் இருந்த ஜெயசூர்யா, சுபாஷ்,  நவீன், ராஜேஷ் உள்பட ஐந்து நபர்களை மதனுடன் சென்ற 8 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டியதில் அண்ணன், தம்பி ஜெயசூர்யா, சுபாஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்ற மூன்று நபர்களையும் வெட்ட முற்படும் பொழுது அவர் தப்பியோடி விட்டனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக உயிர் தப்பிய ராஜேஷ், நவீன், ஆகியோர்  காளையார்கோவில் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்குச்சென்ற காளையார்கோவில் போலீஸார் இருவரது சடலங்களையும் உடற்கூராய்வுக்காக, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இச்சம்பவம் தொடர்பாக காளையார்கோவில் போலீஸார் வழக்குப்பதிந்து தப்பியோடிய கொலையாளிகளைத் தேடி வந்தனர்.

 

இந்நிலையில் கொலை வழக்கில் தொடர்புடைய  சிவகங்கை காளவாசலைச் சேர்ந்த திவாகர் (23), சாஸ்திரி தெருவைச் சேர்ந்த

வாணிகருப்பு மனைவி மதுமதி (26),  சுந்தரநடப்பைச் சேர்ந்த சந்தோஷ் (23), நகரம்பட்டியைச் சேர்ந்த ராம்ஜி (21), யுவராஜ் (22), அருண்குமார் (30), ஒக்கூரைச் சேர்ந்த அபினேஷ் (22) ஆகிய 7 பேரை கைது செய்தனர். மஞ்சுவிரட்டு போட்டியில் காளையை பிடித்த தகராறில், இரட்டைக் கொலை நடந்தது அப்பகுதி மக்களையும், ஜல்லிக்கட்டு ஆர்வலர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது, குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை கைது செய்ய உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.