Hathras Stampede: உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராஸில் நடந்த ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 116 பேர் உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.


முன்னதாக, இதுகுறித்து தலைமை மருத்துவ அதிகாரி ராஜ்குமார் அகர்வால் கூறுகையில், இதுவரை 27 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். முதற்கட்ட தகவல்களின்படி, மக்கள் கூட்டம் அலைமோதியதால் நெரிசல் ஏற்பட்டதாக தெரிகிறது என்று சிக்கந்தரா ராவ் காவல் நிலைய எஸ்ஹோ ஆஷிஷ் குமார் தெரிவித்தார்.


இச்சம்பவம் குறித்து பேசிய எட்டா எஸ்எஸ்பி ராஜேஷ் குமார் சிங், "எட்டா மருத்துவமனைக்கு இதுவரை 23 பெண்கள், 3 குழந்தைகள் உட்பட பல சடலங்கள் வந்துள்ளன. மேலும் காயம் அடைந்தவர் மருத்துவமனைக்கு இன்னும் வரவில்லை. உடல்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். 


உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸில் ஆன்மீக சொற்பொழிவு கூட்டம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். பின்னர், தரிசனம் முடிந்ததும் அனைவரும் கலைந்து செல்ல முற்பட்டனர். அப்போது, மக்கள் கூட்டம் அலைமோதியதால் கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் என திக்குமுக்காடினர்.


இந்த பிரார்த்தனை கூட்டத்தை மானவ் மங்கள் மிலன் சத்பவ்னா சமகம் கமிட்டி ஏற்பாடு செய்திருந்தது. இதில் மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 






இந்த சம்பவம் அறிந்த அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 


மேலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார்.  காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்யுமாறும் முதல்வர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.


முதல்வர் ஆதித்யநாத், இரண்டு மூத்த அமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலாளருடன் காவல்துறை தலைமை இயக்குநரையும் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தார்.


இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்து விசாரிக்க ஆக்ரா கூடுதல் காவல்துறை இயக்குநர் ஜெனரல் மற்றும் அலிகார் கமிஷனர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. 


இந்த துயர சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, "உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் நடந்த விபத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட ஏராளமான பக்தர்கள் உயிரிழந்த செய்தி நெஞ்சை பதற வைக்கிறது.


இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்" என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.