செல்லூர் கே.ராஜூ மேடை பேச்சு



 

மதுரை ஜீவாநகர் ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., அவர்களின் 108வது பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள், அ.தி.மு.க., நிர்வாகிகள், அதிமுக தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த பொதுக்கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமை தாங்கி பேசினார். இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதலமைச்சர் உதயநிதி தொடங்கிவைத்தார். கலைஞர் கருணாநிதி கூட தனது மகன் ஸ்டாலினை பார்த்து, பார்த்து கவனமாக அரசியலுக்கு கொண்டு வந்தார். ஆனால் முதல்வர் ஸ்டாலின் அப்படி இல்லை நேரடியாக இன்பநிதியை களத்தில் இறக்கிவிட்டார். இன்பநிதி யுகே.,வில் படிக்கிறார் என்றார்கள், இன்று நேரடியாக களத்தில் கொண்டுவந்துவிட்டார்கள்.

 

மாவட்ட ஆட்சியர் பாவம்

 

ஜல்லிக்கட்டு போட்டியில் இன்பநிதி அமருவதற்கு மதுரை மாவட்ட ஆட்சியர் இடம் கொடுத்து எழுந்திருக்கிறார்கள். அவர் பெண் மாவட்ட ஆட்சியர் என்ன செய்வார், திமுக ஆட்சியில் ஆண் மாவட்ட ஆட்சியரே சிரமப்படுகிறார்கள். இவர் என்ன செய்வார் பாவம். சரி, மக்கள் வாய்ப்பு கொடுத்துகிறார்கள் என ஆளும் திமுக கட்சி அனுபவிக்கிறது. ஆனால் தாங்கள் அப்படியில்லை என்றும் மக்கள் தொண்டனாக இருப்போம்.

 

அமைச்சர் மூர்த்தி வேகமாக அதை தொடைக்கிறார்

 

அமைச்சர் மூர்த்தி அருகில் இன்பநிதியும் அவரது நண்பர்களும் அமர்ந்திருக்கிறார்கள். தன்னை ஆண்டப்பரம்பரை என்று குறிப்பிட்டுக் கொள்ளும் அமைச்சர் மூர்த்தி, அருகில் அமர்ந்த இன்பநிதிக்கு ஸ்நாக்ஸ் வழங்கும் போது அதன் துகள்கள் அவர் மீது விழுந்துவிட்டது. தன்னை ஆண்டப்பரம்பரையாக குறிப்பிடும் அமைச்சர் மூர்த்தி வேகமாக அதை தொடைக்கிறார். அடுத்து எனக்கு அமைச்சரவை கொடுங்கள் இன்பநிதி என இப்போதே துண்டு போட்டு வைக்கிறார். அவருக்கு அருகிலேயே அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கெத்தாக அமர்ந்திருந்தார், அதுதான் கெத்து, கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்கள்தான் என்பதற்கு பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தான் உதாரணம்.

 

தங்கக் கட்டி கொடுத்தாலும் ஆட்சிக்கு வரமுடியாது

 

திமுக ஆட்சியில் கள்ளச்சாரயம் குடித்து இறந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம், அதேபோல் ஜல்லிக்கட்டில் வீர மரணம் அடைந்தால் ரூ.3 லட்சம் நிவாரணமா?. பொங்கல் தொகுப்பாக ரூ.5000 கொடுக்க வேண்டும் என முன்னதாக கூறினார்கள், ஆனால் இப்போது ஆட்சிக்கு வந்ததும் கொடுக்கவில்லை. அடுத்த வருடம் கொடுக்கப்படும் என துணை முதல்வர் உதயநிதி கூறுகிறார். தேர்தல் வரும் காரணத்தினால் கடைசி வருடம் மட்டும் ரூ.5000 கொடுத்தால் மக்கள் ஏமாந்துவிடுவார்களா, திமுக அடுத்த வருடம் வீடு வீடுக்கு தங்கக்கட்டியே கொடுத்தாலும் 2026ல் ஆட்சிக்கு வரப்போவது அதிமுகதான், முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான்” எனக் குறிப்பிட்டார்.