மதுரை மகபூப்பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் காம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர்,"தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. அந்த அறிக்கையில் இருந்து வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளன. துப்பாக்கிச் சூடு நடத்த அவசியமில்லாத நிலையிலும், குருவிகளை சுடுவது போல மக்களை சுட்டுக் கொன்றுள்ளனர்.




அறிக்கையில் துப்பாக்கிச் சூட்டிற்கும் ஸ்டெர்லைட் நிர்வாகத்திற்கும் சம்பந்தம் இல்லை என்பதும், காவல்துறை அதிகாரிகள் மட்டுமே பொறுப்பு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாக வரும் தகவல்கள் ஏற்புடையதாக இல்லை.

அரசின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் தலையீடும் இருந்திருக்கும்.



தமிழக அரசு அந்த அறிக்கையை வெளியிடாமல் இருப்பது சர்ச்சைக்கும், சந்தேகத்திற்கும் இடம் அளிக்கிறது. எனவே, அறிக்கையை வெளியிட்டு சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஒரு மோசமான வரலாற்றுக்கு முடிவு கட்ட வேண்டும். உயிரிழந்த மக்களுக்கு அப்போது தான் உரிய நியாயம் கிடைக்கும். நேர்மையான, நியாயமான சி.பி.ஐ., அதிகாரிகளை நியமித்து விசாரணை நடத்த வேண்டும். குற்றவாளிகள் யாரும் தப்பிக்க விடாதபடி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.



 

மாநில அரசுகளின் மின்சார ஒப்பந்தங்களில் மத்திய அரசு தலையிட வேண்டிய அவசியம் இல்லை. மத்திய அரசு மாநில அரசுகளை துச்சமாக நினைக்கிறது. மின்சார வாரியத்தை சின்னாபின்னமாக்கி அதை முழுமையாக தனியார் வசம் ஒப்படைக்க நினைக்கிறது. சீமான் பா.ஜ.க.,வின் பி-டீம் போலவே பேசிக் கொண்டிருக்கிறார்.

தமிழகத்தில் திமுக - பா.ஜ.க., கூட்டணி ஆட்சி தான் நடக்கிறது என சீமான் சொல்வது கற்பனையான பேச்சு தான்" என்றார்.

 





 

 

மதுரை துணை மேயர் குறித்து தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுகிறதே ?

 

எங்கள் கட்சியில் ஒவ்வொரு நபர்களையும் பார்த்து, பார்த்து தான் பதவி வழங்குகிறோம். புகார் குற்றச்சாட்டுகள் உண்மையென்றால் உடனடியாக நடவடிக்கை எடுப்போம். மதுரை துணை மேயர் குறித்து சொல்லப்படும் குற்றச்சாட்டு அவதூறானது என்றார்.