திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் முடிகளை பெறுவது தொடர்பாக அறிவிக்கப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை  உத்தரவிட்டுள்ளது. மனுதாரர் மனுவை திரும்ப பெறுவதாக தெரிவித்ததைத் தொடர்ந்து வழக்கை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.


திருச்சியை சேர்ந்த ராகவன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், "திருச்சி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் மொட்டை அடித்து காணிக்கையாக வழங்கும் முடிகளை பெறுவதற்கான இணைய வழி ஒப்பந்தத்திற்கான அறிவிப்பு ஜூலை மாதம் அறிவிக்கப்பட்டது. ஆனால் இதற்கான அறிவிப்பாணை கோவில் நிர்வாகத்தின் இணையதளத்தில் 26ஆம் தேதியே பதிவேற்றம் செய்யப்பட்டது. இது சட்டத்திற்கு புறம்பானது. எனவே இந்த அறிவிப்பாணையை ரத்து செய்து புதிய ஒப்பந்த அறிவிப்பை அறிவிக்க வேண்டும்" என கூறியிருந்தார் 


இந்த வழக்கு நீதிபதி நிர்மல் குமார் முன்பாக விசாரணைக்கு வந்தது. கோவில் நிர்வாகம் தரப்பில், " புதிய இணைய வழி ஒப்பந்தத்திற்கான அறிவிப்பாணை அறிவிக்கப்பட்டு, செப்டம்பர் 7ஆம் தேதி ஒப்பந்தம் நடைபெற உள்ளது" என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மனுதாரர்  மனுவை திரும்ப பெறுவதாகத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து நீதிபதி வழக்கினை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


 




மற்றொரு வழக்கு


திருச்சி காவிரி ஆற்றின் குறுக்காக வேங்கூர் பூதுத்துறை கிராமத்திலும், கொள்ளிடம் ஆற்றின் குறுக்காக இடையாற்று மங்கலம் தண்ணீர் பந்தல் கிராமத்திலும் இரண்டு தடுப்பணைகள் கட்டக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.


திருச்சி உத்தமசீலியைச் சேர்ந்த விஜயகுமார் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகள் முக்கொம்பில் பிரிந்து கல்லணையில் ஒன்று சேர்கிறது. உத்தமசீலி கிராமத்தில் காவிரி ஆற்றின் குறுக்காக வேங்கூர்புதுத்துறை  கிராமத்திலும், கிளிக்கூட்டில் இருந்து கொள்ளிடம் ஆற்றின் குறுக்காக இடையாற்றிமங்கல்ம் தண்ணீர்பந்தல் கிராமத்திற்கும் இடையே தடுப்பணைகளை அமைத்தால் இப்பகுதி விவசாயத்திற்கும், குடிநீருக்கும் மிகுந்த உதவியாக இருக்கும். இதனால் பாலங்களின் தூண்கள் பாதுகாக்கப்பட்டு, பலப்படுத்தப்படும். இப்பகுதியில் பல தனியார் நிறுவனங்கள் நிலத்தடி நீரை பெரிய போர்கள் மூலமாக உறிஞ்சி எடுத்து விற்பனை செய்யும் சூழல் உள்ளது.


ஆகவே, இரண்டு தடுப்பணைகள் அமைத்துக் கொடுக்கக்கோரி மனு அளித்தோம். திருச்சி மாவட்ட பணித்துறை செயற்பொறியாளர் அதனை நிராகரித்து உத்தரவு பிறப்பித்தார். ஆகவே திருச்சி காவிரி ஆற்றின் குறுக்காக வேங்கூர் பூதுத்துறை கிராமத்திலும், கொள்ளிடம் ஆற்றின் குறுக்காக இடையாற்று மங்கலம் தண்ணீர் பந்தல் கிராமத்திலும் இரண்டு தடுப்பணைகள் கட்ட உத்திரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.


இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஹேமலதா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அலுவலர்கள், அரசு அதிகாரிகளே  முடிவெடுக்க வேண்டும். அப்பகுதியின் கள நிலவரத்தை கருத்தில் கொள்ளாமல் உத்தரவிட்டால் பல பிரச்சனைகள் எழ காரணமாகிவிடும். நீதிமன்றமே அரசை ஏற்று நடத்த முடியாது. அதில் நிபுணத்துவம் பெற்ற அதிகாரிகளே தடுப்பணை கட்டுவது குறித்து பரிந்துரைக்க வேண்டும். ஆகவே நீதிமன்றம் அரசின் கொள்கை ரீதியான முடிவில் தலையிட இயலாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.