சவுக்குசங்கர் தனக்கு ஜாமின் அளிக்க கோரி போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவும் நாளை விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.


 


கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர்


 

காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக சவுக்கு சங்கர் கோவை மாநகர சைபர் க்ரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதனிடையே தேனியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் சவுக்கு சங்கர் தங்கியிருந்தார். அப்போது அவரை கைது செய்ய வந்த கோவை போலீசாருக்கு உதவியாக தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பாக்கியம் என்பவர் உடன் சென்றுள்ளார். இதையடுத்து பெண் என்றும் பாராமல், சவுக்கு சங்கர் தரக்குறைவாக பேசியதோடு கீழே தள்ளியுள்ளார். மேலும் தடை செய்யப்பட்ட 2.5 கிலோ கஞ்சா போதைப்பொருள் வைத்திருந்ததாக சவுக்கு சங்கர் மற்றும் அவரது உதவியாளர்கள் ராம்பிரபு, ராஜரத்தினம் ஆகியோருக்கு கஞ்சா கொடுத்ததாக மகேந்திரன் என்பவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. குறிப்பாக அரசுப் பணி செய்ய விடாமல் தடுத்தல், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் போதைப்பொருள் புழக்கம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

 

சிறப்பு நீதிமன்றம் விசாரணை


 

சிறப்பு நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் கஞ்சா வைத்திருந்தது தொடர்பாக மதுரை மாவட்ட போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தின் முன் சவுக்கு சங்கர் ஏற்கனவே கடந்த 8-ம் தேதி நேரில் ஆஜர்படுத்தப்பட்டார்.  இந்நிலையில் காவலில் எடுத்து விசாரணை செய்ய அனுமதி கோரி தேனி மாவட்ட PC பட்டி காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மதுரை மாவட்ட போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி செங்கமலச் செல்வன் முன் கடந்த 20-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது சவுக்கு சங்கருக்கு மருத்துவ பரிசோதனை செய்ய உத்தரவிட்ட நிலையில் மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் மீண்டும் சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அதனை தொடர்ந்து சவுக்கு சங்கரை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து நீதிபதி செங்கமலச் செல்வன் உத்தரவிட்டார்.

 

 சவுக்கு சங்கர் 15 நாட்கள் நீதிமன்ற காவல்


 

இந்நிலையில் 2 நாட்கள் விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று மீண்டும் மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சவுக்குசங்கர் நீதிபதி செங்கமலசெல்வன் முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார். பலத்த காவல்துறை பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு சவுக்கு சங்கர் அழைத்துவரப்பட்டார். அப்போது 2 நாள் விசாரணையில் காவல்துறையினர் துன்புறுத்தினரா என்று நீதிபதி கேட்டார் அப்போது, “காவல் விசாரணையின் போது காவல்துறையினர் என்னை துன்புறுத்தவில்லை" என தெரிவித்தார். இதையடுத்து அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து சவுக்கு சங்கரை போலீசார் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். இதேபோன்று சவுக்குசங்கர் தனக்கு ஜாமின் அளிக்க கோரி போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவும் நாளை விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடதக்கது.