உசிலம்பட்டி அருகே ராமலிங்க சுவாமி - சௌடாம்பிகையம்மன் கோயிலின் திருவிழாவை முன்னிட்டு உடலில் கத்தியால் வெட்டிக் கொண்டு பக்தர்கள் விநோத நேர்த்திக் கடன் செலுத்தினர்.

 

மதுரையில் விநோத திருவிழா நிகழ்வு


 

மதுரை மாவட்டம் எழுமலையை அடுத்துள்ள இ.கோட்டைபட்டி கிராமத்தில் அமைந்துள்ளது, ராமலிங்க சுவாமி - சௌடாம்பிகையம்மன் திருக்கோயில். இந்த கோயிலின் வைகாசி திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம். உசிலம்பட்டி சுற்றுவட்டார பக்தர்கள் பலரும் இந்த திருவிழாவில் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டும் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த கோயில் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக கரகம் எடுத்து வரும் போது கத்தியால் உடலில் வெட்டிக் கொள்ளும் விநோத நேர்த்திக்கடன் செலுத்தும் விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. 50- க்கும் மேற்பட்ட பக்தர்கள் உத்தப்புரம் முருகன் கோயிலில் இருந்து கரகத்தை ஊர்வலமாக எடுத்து வரும் போது உடலில் கத்தியால் வெட்டிக் கொண்டு நேர்த்திக் கடன் செலுத்திவாறு கோயிலுக்கு கொண்டு வந்தனர்.

 


 

கத்தியால் உடலை வெட்டிக் கொண்ட பக்தர்கள்


 

முன்னதாக அம்மாபட்டி கிராம மக்களும் கரகம் எடுத்து கோயிலுக்கு கொண்டு வந்தனர். அவர்களும் கத்தியால் உடலை வெட்டிக் கொண்டு விநோத நேர்த்திக் கடனை செலுத்தி ஓம் சக்தி, பராசக்தி என்ற கோசங்களை எழுப்பியவாறு கரகத்தை ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். இந்த திருவிழாவில் இரு கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

 

விழாவை பார்ப்பதற்கு வித்தியாசமாக இருந்தது


 

மேலும் இதுகுறித்து நம்மிடம் உசிலம்பட்டியை சேர்ந்த சக்தி சரவணன், “மதுரை மாவட்டம் பண்பாடு, கலாச்சாரத்தில் மேலோங்கி இருக்கும் நகரமாகும். மதுரையுடன் மேலூர், உசிலம்பட்டி, திருமங்கலம் உள்ளிட்ட கிராமங்கள் நிறைந்த பகுதியும் சேர்ந்திருக்கிறது. இங்கு கொண்டாடப்படும் திருவிழாக்கள் தனித்துவமாக இருக்கும். ஆண்கள் மட்டும் கலந்துகொள்ளும் கறி விருந்து திருவிழா, திருவிழால் கிடாய் முட்டு சண்டை, சேவல் கட்டு, என ஒவ்வொரு பக்கமும் வெவ்வேறு மாதிரி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் வைகாசி மாதத்தை முன்னிட்டு உசிலம்பட்டி அருகே உள்ள ராமலிங்க சுவாமி - சௌடாம்பிகையம்மன் கோயிலின் திருவிழாவை  முக்கிய நிகழ்வாக கரகம் எடுத்து வரும் போது கத்தியால் உடலில் வெட்டிக் கொள்ளும் விநோத நேர்த்திக்கடன் செலுத்தும் விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. பல்வேறு வேண்டுதல்களை மனதில் வைத்து பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தி வருகின்றனர். இந்தாண்டு இந்த விழாவில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. நண்பர்களுடன் சேர்ந்து இந்த விழாவை பார்ப்பதற்கு வித்தியாசமாக இருந்தது” என்று தெரிவித்தார்.