தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை  வெள்ள பாதிப்பு தொடர்பாக அரசின் செயல்பாடுகள் குறித்து முன்னாள் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். வெள்ளத்தால் தத்தளிக்கிறது தலைநகர் சென்னை. மழை காலத்தின் துவக்க நிலையிலேயே, இரண்டு நாள் பெய்த மழைக்கே சென்னை கடல் போல காட்சி அளிக்கிறது. இது மிக வருத்தம் அளிக்கிறது. 20 செமீ மேல் மழை பெய்யும் என கணிக்கப்பட்ட நிலையில், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சென்னையில் தண்ணீர் தேங்கி பாதிப்பிற்கு உள்ளாகும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பகுதிகள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டு உள்ளன. இருந்தும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.



 

ஆய்வு கூட்டங்களை நடத்தி, அறிவிப்புகள் வெளியிட்டார் முதல்வர். ஆனால், அவை வெறும் அறிவிப்புகளாக மட்டுமே உள்ளனவோ என நினைக்கும் அளவில் நிலைமை உள்ளது. பல மாவட்டங்களில் நீரில் அடித்துச் செல்லப்படும் நிலை உள்ளது, அது முற்றிலும் தடுக்கப்பட வேண்டும். அ.தி.மு.க ஆட்சியில் மழை பாதிப்பு காலங்களில் அம்மா உணவகங்கள் மூலமாக இலவச உணவுகள் வழங்கப்பட்டன. ஆனால், உணவக ஊழியர்கள் சம்பள பிரச்னையில் உள்ளனர். அதை எப்படி அரசு சமாளிக்க போகிறது?



 

கஜா புயல் காலத்தில் ஒரு மீனவர் கூட உயிர் இழக்கவில்லை. இரவு பகலாக கட்டுப்பாட்டு மையத்தில் தொடர்பில் இருந்து, கடந்த ஆட்சியில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தற்போது மக்களை பாதுகாப்பதில் அரசு தவறி விட்டதோ என்கிற அச்சம் எழுந்துள்ளது. நீர் நிலைகளில் 50% நிரம்பிய பின்னர் உபரி நீரை வெளியேற்றப்படும் போது, மக்களுக்கு முறையான எச்சரிக்கையும் அளிக்கப்படவில்லை. நிவாரண முகாம்கள் கொரோனா முகாம்களை விட மிகவும் சுகாதாரமாக, பாதுகாப்பாக அமைக்கப்பட வேண்டும்.



 

அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு போதிய ஒத்துழைப்பு வழங்க அ.தி.மு.க தயாராக உள்ளது. பயிர் சேதம், கால்நடைகள் உயிரிழப்பு, வீடுகள் சேதம் உள்ளிட்டவைகள் உரிய நிவாரணம் உடனடியாக வழங்க வேண்டும். மழை பாதிப்பை கணிக்க அரசு தவறி விட்டதா? மக்களை முறையாக எச்சரிக்க அரசு தவறி விட்டதா? இரண்டு நாள் மழையை கூட சமாளிக்க முடியாமல் அரசு திணறுகிறது. நீர் நிலைகள், கலவாய்களை தூர்வாரும் பணிகள் முறையாக மேற்கொள்ளப்பட்டு இருந்தால், இந்த நிலை வந்திருக்காது. மழையை நம்மால் தவிர்க்க முடியாது, ஆனால் உயிர் இழப்புகள் ஏற்படாமல் தவிர்த்திருக்க முடியும்” என தெரிவித்துள்ளார்.