முல்லைப் பெரியாறு அணை  மேற்குதொடர்ச்சி மலையில் துவங்கி மேற்கு நோக்கி கேரளாவில் பாயும் பெரியாற்றின் மீது கட்டப்பட்ட அணையாகும். இது கட்டப்பட்டுள்ள இடம் கேரளாவுக்கு உரிமையானது. தமிழக பொதுப்பணித்துறை இவ்வணையைப் பராமரித்து வருகிறது. இதன் கொள்ளளவு 15.5 டி.எம்.சி, உயரம் 155 அடி ஆகும். 




மதராஸ் மாகாணத்திற்கு தண்ணீரை திருப்பி விவசாயப்பணிகளுக்கு பயன்படுத்திக்கொள்ளும் பொருட்டு 'பெரியாறு திட்டத்தின்' கீழ் அப்போதைய சென்னை மாகாணத்திற்கும், திருவிதாங்கூர் அரசருக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. 1886 ஆம் ஆண்டு அக்டோபர் 29ம்தேதி கையொப்பமிடப்பட்ட இந்த பெரியாறு குத்தகை ஒப்பந்தந்தின்படி, ஒரு ஏக்கர் நிலத்திற்கு ஐந்து ரூபாய் ஆண்டு வாடகை என்ற அடிப்படையில் 999 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டது. பெரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டதால் முதலில் பெரியாறு அணை என்றழைக்கப்பட்ட இவ்வணை, முல்லையாறு மற்றும் பெரியாறு இரண்டும் சேருமிடத்தின்கீழ் அமைந்துள்ளதால் இரு ஆறுகளின் பெயர்களையும் இணைத்து ’முல்லைப் பெரியாறு அணை’ என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. 




ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின் போது 1787 இல் இராமநாதபுரம் மன்னர் முத்துராமலிங்க சேதுபதி தனது பகுதி மக்களின் பஞ்சத்தை தீர்ப்பதற்கு வைகையையும் பெரியாற்றையும் இணைக்கும் முயற்சியை மேற்கொண்டு  தன்னுடைய அமைச்சரை வருசநாடு பகுதிக்கு அனுப்பி அங்கிருந்த மலைவாழ் பழியர்கள் மூலம் மேற்கு தொடர்ச்சி மலை வழியாக சென்று தற்போது இருக்கும் பெரியாறு அணை இருக்கும் இடத்தை கண்டறிந்ததாக  கூறப்படுகிறது.


ஆனால் அப்போதைய காலத்தில் போதுமான நவீன வசதிகள் இல்லாத நிலையிலும் போதிய பணம் இல்லாத நிலையிலும் திட்டம் கைவிடப்பட்டது. அப்போதைய காலகட்டத்தில் சுமார் 10 ஆண்டு காலம் நீடித்த தாது வருடப் பஞ்சம் இருந்தது. இந்தப் பஞ்சத்தால் பல லட்சம் மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்த நிலையில் அப்போதைய ஆங்கில அரசு பெரியாறு  நீரை தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட மக்களுக்கும் கொண்டு வருவதும் என ஒரு முயற்சி எடுத்தது.




இந்த முயற்சி பல்வேறு கட்ட தோல்விகளுக்கு பின் ஆங்கிலேய பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுக்  என்பவர் இந்தப் பகுதியில் அணை கட்டுவது குறித்து பல்வேறு திட்டமிட்ட முயற்சிகளை மேற்கொண்டு அப்போதைய காலகட்டத்தில் உள்ள பல்வேறு  இடையூறுகளுக்கு பிறகு  அணை வெற்றிகரமாக கட்டி முடிக்கப்பட்டு 1895ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் தேதி ஆங்கிலேய ஆட்சியில் இருந்த   சென்னை கவர்னர் வென்லாக் என்பவரால் அணை திறந்து வைக்கப்பட்டது.  இந்த அணையின் பயனாக 5 மாவட்ட மக்கள் எப்படி முன்னேற்றம் கண்டார்கள் என்பதற்கு ஒரு வரலாற்றுச் சான்றாக தற்போதுள்ள மேலூர் பகுதி விளங்குகிறது.  ஒரு குறிப்பிட்ட பிரிவினர் 400 ஆண்டுகளாகவே முன்பு அரசுக்கு கட்டுப்படாமல் வரி கட்டாமலும் இருந்துள்ளனர். அப்படி குடியிருந்தவர்கள் பகுதிகளுக்கு பெரியாற்று தண்ணீர் கொண்டு போனால் அவர்கள் திருந்தி விவசாயத்தில் ஈடுபடுவர் என்ற நோக்கத்தில் தண்ணீரை கொண்டு சென்றதும் விவசாயிகளாக மாறி அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பண்பட்டவர்களாகவும் அரசுக்கு வரி செலுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.




தற்போது தொடரும் இந்த முல்லைப்பெரியாறு சர்ச்சை, தற்போது வரும் தண்ணீர் நிறுத்தப்பட்டாலும் அல்லது அணை இல்லாமல் போனாலோ மீண்டும் ஒரு தாது வருடப் பஞ்சம் நிலவுவது என்பது உறுதி என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள். முல்லைப் பெரியாறு அணை 155 அடி உயரம் உள்ளது இந்த அணை தண்ணீரானது இதுவரை 8 முறை மட்டுமே 152 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டுள்ளது. மீதி உள்ள வருடத்தில் தண்ணீர் தேங்காத பகுதிகளில் தேக்கடி குமுளி சூழ்ந்துள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தனியார் சிலர் ஆக்கிரமித்து தங்கும் விடுதிகளும் மாளிகைகளும் கட்டியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இவர்களால்தான் தற்போது தொடரும் இந்த முல்லைப்பெரியாறு அணை பிரச்சனையின் முக்கிய காரணமாக விளங்குகிறார்கள். 




தங்கள் ஆக்கிரமித்துள்ள இடங்களை தக்க வைப்பதற்காக தொடர்ந்து பல்வேறு பிரச்சினைகளை கிளப்பி வருவது தொடர் கதை ஆகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் முல்லைப் பெரியாறு அணையின் விபரங்கள் மற்றும் அதன் வரலாறு தெரியாத சிலர் தனது சுயநலத்திற்காகவும் தற்போது இந்த விஷயத்தை பெரிது படுத்தும் செயல்களும் தமிழகத்திலும் நடந்து வருகிறது. 5 மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் இந்த முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளா அரசும் தமிழக அரசும் தொடர்ந்து நாட்களை கடத்திக்கொண்டு செல்வதை தவிர்த்து விரைவில் சுமூக தீர்வை  எட்டுவதே இரு அரசுக்கும் இரு மாநில மக்களுக்கும் நல்லது ஏனென்றால் இரு மாநில மக்களும் பொருளாதார ரீதியாகவும் சரி, உணவு ரீதியாகவும் சரி ஒன்றை ஒன்று சார்ந்தே இருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.


பேபி அணையை பலப்படுத்திய பின் விரைவில் முல்லை பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேட்டியளித்தார்.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூப்பில் வீடியோக்களை காண