மதுரை ஆரப்பாளையம் டி.டி.சாலை பகுதியில் வசித்த ராஜாமணி அம்மாள் (வயது 86). முதுமை காரணமாக இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையிலும் அந்த மூதாட்டி வாக்களிக்க விரும்பினார். அவரது விருப்பத்தை நிறைவேற்ற அவரது மகன் ஆம்புலன்சில் அவரை ஏற்றிக்கொண்டு ஆரப்பாளையம் தனியார் பள்ளி வாக்குச்சாவடிக்கு அழைத்து சென்றார். அங்கு சக்கர நாற்காலியில் மூதாட்டியை அமர வைத்து வாக்குச்சாவடிக்குள் அழைத்து சென்றனர். பின்னர் அவர் தனது வாக்கை பதிவு செய்தார். தள்ளாத வயதிலும் தனது ஜனநாயக கடமையை ஆற்றிய மூதாட்டி ராஜா மணிஅம்மாளை தேர்தல் அலுவலர்கள் பாராட்டினர்.

 

 



 

இதுகுறித்து மூதாட்டி ராஜாமணி அம்மாள்  கூறுகையில், எனக்கு விவரம் தெரிந்த நாள் முதல் வாக்களித்து வருகிறேன். எத்தனை தேர்தல்களில் வாக்களித்தேன் என்பது நினைவில்லை. உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலும் இந்த முறையும் வாக்களிக்க நினைத்தேன். டாக்டர்களின் ஆலோனைப்படி ஆம்புலன்சில் வந்து வாக்களித்தது மகிழ்ச்சியாக உள்ளது என்றார். இதனை வரவேற்று அப்போதே நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சமூக ஊடகங்களில் தமது பாராட்டை தெரிவித்து இருந்தார். இந்நிலையில்   மத்திய சட்டமன்ற தொகுதியை  சேர்ந்த அந்த ராஜாமணி பாட்டி தற்போது எஸ் எஸ் காலனி பகுதியில் வசித்து வருகிறார். அவரை இன்று தன் குடும்பத்தினருடன் நேரில் சந்தித்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முதுமையான காலகட்டத்தில் கூட வாக்களிக்கும் ஜனநாயக கடமையை நிறைவேற்றியதற்காக  தமது நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

 






 

 

மேலும் கொரோனா காலகட்டம் என்பதால் அப்போது வந்து நேரில் நன்றி தெரிவிக்க முடியவில்லை என்று கூறினார். அவரிடம் பேசிய  ராஜாமணி அம்மாள்  அடுத்த தேர்தலிலும் ஓட்டு போட வருவேன் என தெம்பாக கூறி அமைச்சரை உற்சாகப்படுத்தினார். மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக வயது முதிர்வை காரணம்காட்டி வீட்டில் தங்கி விடாமல் வாக்களிக்கும் ஜனநாயக கடமையை நிறைவேற்றிய ராஜாமணி அம்மாளுக்கு பூங்கொத்து அளித்து வாழ்த்து தெரிவித்த அமைச்சர் தனது குடும்பத்தினரை அறிமுகம் செய்து வைத்து கலந்துரையாடினார். வாக்களிக்கும் முக்கியத்துவத்தை தள்ளாத வயதிலும் உணர்த்திவருகிறார் மணி அம்மாள் பாட்டி