கடந்த காலங்களில் பாஸ்போர்ட் அப்லே செய்யும் பணி பெறும் சவலாக இருந்தது. 'ஒரே இந்தியா ஒரே பாஸ்போர்ட்' உள்ளிட்ட திட்டங்களால் பாஸ்போர்ட் பெறும் பணி எளிமை யாக்கப்பட்டது. பாஸ்போர்ட் பெற 50 கி.மீ மேல் பயணப்பட வேண்டியது குறைக்கப்பட்டது. எம்.பாஸ்போர்ட் ஆப் தொடங்கப்பட்டு பல முன்னேற்றங்கள் காணப்பட்டுள்ளன. 2014-ல் காவல்துறையினர் விசாரணை 35 நாள்கள் வரை எடுத்துக் கொள்ளும். 2017-ல் 18 நாட்களாகக் குறைந்தது.




 

2018-ம் ஆண்டில் எம்.பாஸ்போர்ட் வந்ததற்குப் பிறகு, 6 நாள்களாகக் குறைந்து மிக எளிமையாகிவிட்டது. எம்.பாஸ்போர்ட் சேவையால் கோப்புகள் அனைத்தும் டிஜிட்டல் ஆக்கப்பட்டது. இப்படி பல்வேறு நடைமுறை சிக்கல்களை குறைக்க வேண்டும் எனவும், குற்றங்களை குறைக்க வேண்டும் என டிஜிட்டல் முறை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் அதிகாரி ஒருவர் டிஜிட்டல் முறையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, சட்ட விரோதமாக பணம் பெற்று பாஸ்போர்ட் வழங்கியது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.



 

மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் மூத்த கண்காணிப்பாளராக வீரபத்ரன் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் சட்ட விரோதமாக பணம் பெற்றுக் கொண்டு பாஸ்போர்ட் வழங்கியதாக புகார் எழுந்தது. அதனைத் தொடர்ந்து சி.பி.ஐ இந்த புகார் தொடர்பாக ரகசியமாக  விசாரணை நடத்தியது. சி.பி.ஐ விசாரணையில் மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் வீரபத்ரன் இலங்கையைச் சேர்ந்த நபர்களுக்கு இந்தியர்கள் என சட்ட விரோதமாக பாஸ்போர்ட் வழங்கியது தெரியவந்தது.  கண்காணிப்பாளர் வீரபத்திரன், டிராவல்ஸ் ஏஜெண்ட்  ரமேஷ் என்பவரின் துணையுடன் 45 ஆயிரம் ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு சட்டவிரோதமாக பாஸ்போர்ட் வழங்கியுள்ளார், என்பது உறுதியானது.

 




 

 

அதனை தொடர்ந்து கண்காணிப்பாளர் வீரபத்ரன் மற்றும் முகவர் ரமேஷ் மற்றும் பாஸ்போர்ட் வாங்கியவர் என மூன்று நபர்கள்  மீது மதுரை சி.பி.ஐ  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் பணியாற்றும் மூத்த அதிகாரியே பணம் பெற்றுக்கொண்டு சட்டவிரோதமாக பாஸ்போர்ட் வழங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன் இலங்கையில் இருந்து தப்பிய 21 நபர்களுக்கு பாஸ்போர்ட் வழங்குவது குறித்து போலி பாஸ்போர்ட் தயாரித்த தனியார் ஏஜெண்ட் மதுரையில் சிக்கினார். இந்நிலையில் பாஸ்போர்ட் அலுவலகத்தின் முக்கிய அதிகாரி சட்ட விரோதமாக பாஸ்போர்ட் வழங்கியது அம்பலமாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.