அண்டை மாநிலங்களில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள சூழ்நிலையால்,  தமிழ்நாட்டில் வருகிற 15.09.2021 வரை கொண்டாடப்படவுள்ள சமய விழாக்களின் கொண்டாட்டத்திற்கு கூடுதல் தடைகளை தமிழ்நாடு அரசு விதித்துள்ளது. 





”தமிழ்நாட்டில் தற்போது வரும் பண்டிகைக் காலங்களில் கொரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த அதிகளவில் மக்கள் கூடுவதைத் தவிர்ப்பது போன்ற தேவையான கட்டுப்பாடுகளை தொடர்ந்து அமல்படுத்த ஒன்றிய உள்துறை அமைச்சகம் மாநில  அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாலும், தற்போது அண்டை மாநிலமான கேரளாவில் ஓணம் மற்றும் பக்ரீத் பண்டிகைக் கொண்டாட்டங்களின்போது மக்கள் அதிக அளவில் கூடி அதனால் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள சூழ்நிலையிலும், தமிழ்நாட்டில் வருகிற 15.09.2021 வரை கொண்டாடப்படவுள்ள சமய விழாக்களின் கொண்டாட்டத்திற்கு பின்வரும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது:



தற்போதுள்ள கொரோனா பரவல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, சமய விழாக்களை முன்னிட்டு மதசார்பான ஊர்வலங்கள். திருவிழாக்கள் நடத்த தடை உள்ளது. பொது இடங்களில் உறியடி உள்ளிட்ட விளையாட்டுகளை நடத்துவதற்கும்  தடை விதிக்கப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக பொது இடங்களில் சிலைகளை நிறுவுவது அல்லது பொது இடங்களில் சிலைகளை நிறுவுவது அல்லது பொது இடங்களில்  விழா கொண்டாடுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது.


அதுபோன்று, சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்வதற்கும், கரைப்பதற்கும் அனுமதி இல்லாத நிலையில், இச்சமய விழாக்களை பொது மக்கள் தங்கள் இல்லங்களிலேயே கொண்டாடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது . விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக தனி நபர்கள் தங்களது இல்லங்களில் விநாயகர் சிலைகளை வைத்து அனுமதிக்கப்படுகிறது. தனி நபர்களாகச் சென்று அருகிலுள்ள நீர்நிலைகளில்  சிலைகளைக் கரைப்பதற்கும் அனுமதிக்கப்படுகிறது.  சென்னையைப் பொருத்தவரை. கடற்கரையில் குறிப்பாக சாந்தோம் முதல் நேப்பியர் பாலம் வரையிலான வழித்தடத்தில் இச்செயல்பாட்டிற்கு முற்றிலுமாக தடைவிதிக்கப்படுகிறது" என்று தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், தெரிவிக்கப்பட்டது. 



மேலும் அனுமதி தனிநபர்களுக்கு மட்டும் பொருந்தும். அமைப்புகள் இச்செயல்பாடுகளில் ஈடுபடுவது முழுவதுமாக தடைசெய்யப்படுகிறது. தனிநபர்கள், தங்களது இல்லங்களில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட சிலைகளை ஆலயங்களின்  வெளிப்புறத்திலோ/சுற்றுப்புறத்திலோ வைத்துச்  செல்வதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இச்சிலைகளை பின்னர் முறையாக அகற்றுவதற்கு இந்து சமய அறநிலையத்துறையால் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.



 

விநாயகர் சதூர்த்திக்கு தமிழ்நாட்டில் சிலைகள் வைக்க தமிழ்நாடு அரசு அனுமதி மறுத்துள்ள சூழலில் விநாயகர் சதூர்த்திக்கு அனுமதி வழங்கக்கோரி இந்து முன்னணி கட்சியினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஏழுமலை விநாயகர் கோவிலில் இந்து முன்னணி கட்சியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கோவிலில் வழிபாடு செய்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி அளித்துள்ள அரசு விநாயகர் சதூர்த்தி திருவிழாவிற்கும் அனுமதி அளிக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.


மேலும் விநாயகர் சிலை படங்கள் பார்க்க இங்கே கிளிக் செய்யவும் - விநாயகர் சதுர்த்தி நெருங்கும் நிலையில், மதுரையில் தயாராகும் சிலைகள் !