பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வருகை தர உள்ள நிலையில் கோயிலை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 

பிரதமர் மோடி தமிழகம் வருகை

 

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர். மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்க பாஜக தீவிரம் காட்டும் நிலையில், குறிப்பாக தமிழகத்தில் இருந்து கணிசமான எண்ணிக்கையில் எம்.பிக்களை பெற கவனம் செலுத்தி வருகிறது. இதன் விளைவாகவே நடப்பு ஆண்டில் மூன்றாவது முறையாக இன்று பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். அவரது இரண்டு நாள் பயணத்தை ஒட்டி பல்லடம், கோவை மற்றும் மதுரையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.

 





மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம்


இன்று மதுரை வீரபாஞ்சானில் சிறு, குறு நடுத்தர தொழிலதிபர்கள் டிஜிட்டல் மாநாட்டில் பங்கேற்று விட்டு இரவு 7:00 மணிக்கு பிரதமர் மோடி, ஓட்டல் கேட் வே செல்கிறார். அங்கு சிறிது நேரம் ஓய்வுக்கு பின் இரவு 8:00 மணிக்கு பசு மலை, பழங்காநத்தம், திருப்பரங்குன்றம் ரோடு, தெற்குவெளிவீதி வழியாக மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வருகிறார். அம்மன், சுவாமி சன்னதியில் தரிசனம் செய்துவிட்டு இரவு 9:15 மணிக்கு நடக்கும் பள்ளியறை பூஜையில் பங்கேற்கிறார். இதையொட்டி மதுரை நகருக் குள்ளும் இன்று மாலை 6:00 மணி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது .கோயிலில் இருந்து புறப்படும் பிரதமர், வந்த வழியாகவே ஓட்டலுக்கு செல்கிறார்.





 

பக்தர்களுக்கு தடை

 

பிரதமர் வருவதை முன்னிட்டு மதுரை மாநகர் பகுதியில் மாலை 6 மணி முதலே போக்குவரத்திற்கு தடை விதிக்கப்படுகிறது. மேலும் 6 மணி முதல் மீனாட்சியம்மன் கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதி இல்லை எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பக்தர்கள் முழுமையான சோதனை செய்யப்படுகிறார்கள்.

 

கோயில் அருகில் இருக்கக்கூடிய உயரமான கட்டிடங்களில் காவல்துறையினர் நின்றபடி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து கோயிலை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் காவல்துறையின் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சுற்றியுள்ள பகுதிகளில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.