மதுரை கோட்டத்தில் பழனி, திருச்செந்தூர், அம்பாசமுத்திரம், காரைக்குடி, கோவில்பட்டி, மணப்பாறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராஜபாளையம், பரமக்குடி, திண்டுக்கல், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய 13 ரயில் நிலையங்கள் உட்பட 554 ரயில் நிலையங்களை நவீன வசதிகளுடன் அமிர்த ரயில் நிலையங்களாக தரம் உயர்த்த பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். மேலும் திருமங்கலம் அருகே பொது மக்களின் வசதிக்காக கட்டப்பட திட்டமிட்டு இருக்கும் ரயில்வே மேம்பாலத்திற்கும் அடிக்கல் நாட்டினார்.

 


சோழவந்தான் ரயில்வே மேம்பாலத்தையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

 


 

அதேபோல சோழவந்தான் அருகே கட்டி முடிக்கப்பட்ட ரயில்வே மேம்பாலத்தையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார். தேசிய அளவில் ரூபாய் 41,000 கோடி மதிப்பிலான சுமார் 2000 ரயில்வே கட்டமைப்பு திட்டங்களுக்கு காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். 500 ரயில் நிலையங்கள் மற்றும் 1500 ரயில்வே வளாகங்களில் நடைபெற்ற உள்ளூர் நிகழ்ச்சிகளில் அந்தந்த பகுதி மக்கள் பிரதிநிதிகள் மற்றும்  ரயில்வே அதிகாரிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பிரதமர்  பேசும்போது.., ”இந்த நிகழ்ச்சி புதிய இந்தியாவின் வேகம் எடுக்கும் வேலை திறனுக்கு ஒரு சின்னமாக அமைந்துள்ளது. இன்று இந்தியா என்ன செய்துள்ளதோ, அது எதிர்பாராத வேகத்தையும் அளவையும் கொண்டுள்ளது. நமது கனவு பெரியதாக உள்ளது. அதை நனவாக்க கடுமையாக உழைக்கிறோம். இதை வளர்ச்சி அடைந்த இந்தியாவில் வளர்ச்சி அடைந்த ரயில்வே துறையின் நிகழ்ச்சி நிரூபிக்கிறது, என்றார்.



 

 

12 மாநிலங்களில் 300 மாவட்டங்களில் 500 ரயில் நிலையங்களில் ரயில்வே கட்டமைப்பை வலுப்படுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது.  ஐநூறுக்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களின் வளர்ச்சி  துவங்குகிறது. இது தேசத்தின் வளர்ச்சியை கோடிட்டு காட்டுகிறது. இதற்காக இந்திய மக்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக இந்திய இளைஞர்களின் சக்தியை பாராட்டுகிறேன். ஏனென்றால் அவர்கள் தான் வளர்ச்சி அடைந்த இந்தியாவின் உண்மையான பயனாளிகளாக ஆவார்கள். இந்த ரயில்வே திட்டங்கள் பல லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும். இளைஞர்களது சுய வேலைவாய்ப்பு முயற்சியையும் அதிகரிக்கும். வளர்ச்சி அடைந்த இந்தியாவில் ரயில்வே கட்டமைப்பு எப்படி இருக்கும் என தங்களது கனவுகளை போட்டிகள் மூலம் பகிர்ந்து கொண்ட மாணவர்களை வாழ்த்துகிறேன். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டுகிறேன். வரப்போகும் அமிர்த ரயில் நிலையங்கள்  வளர்ச்சிக்கும் வேகத்திற்கும் எடுத்துக்காட்டுகளாக அமையும் என மகிழ்ச்சி தெரிவித்தார். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சங்கனேர் ரயில் நிலையம் 16 ஆம் நூற்றாண்டு பாரம்பரிய அச்சுக் கலையையும், தமிழ்நாட்டில் உள்ள கும்பகோணம் ரயில் நிலையம் சோழர் ஆட்சி காலத்தையும், ஹரியானாவில் உள்ள குருக்கிராம் ரயில் நிலையம் தகவல் தொழில்நுட்ப நகரையும் பிம்பங்களாக பிரதிபலிக்க இருக்கின்றன. அமிர்த ரயில் நிலையங்கள் உள்ளூர் சிறப்புகளை அறிமுகம் செய்யும் வகையில் ரயில் நிலைய கட்டமைப்பு உருவாக்கப்படும் என தெரிவித்தார்.



 

 

இந்த ரயில் நிலையங்கள் மாற்றுத்திறனாளிகள், வயது முதிர்ந்தோர்க்கு நேசமான ரயில் நிலையங்களாக அமையும் என்றார். கடந்த பத்தாண்டுகளில் ரயில்வே துறை வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டுகளாக அமைந்துள்ளவை வந்தே பாரத் ரயில்கள், அம்ரித் பாரத் ரயில்கள், நமோ பாரத் மின்சார ரயில்கள், விரைந்து நிறைவு பெற்ற மின்மயமாக்கல் பணிகள் மற்றும் ரயில்கள், ரயில் நிலைய நடைமேடைகளில் காணும் சுத்தம், சுகாதாரம் ஆகியவையாகும் என்றார். ஆள் காவல் இல்லாத ரயில்வே கேட்டுகள் அனைத்தும் மேம் பாலங்களாக, சுரங்கப்பாதைகளாக மாற்றப்பட்டு தற்போது தங்கு தடையற்ற பாதுகாப்பான ரயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. விமான நிலையங்களில் உள்ள நவீன வசதிகள் தற்போது நடுத்தர மக்களுக்காக ரயில் நிலையங்களிலும் உருவாக்கப்பட்டுள்ளன. தற்போது பொதுமக்கள் ரயில்களில் எளிதாக பயணம் செய்யும் நிலை உருவாகியுள்ளது. உலக அளவில் பொருளாதார  தன்னிறைவில் இந்தியா 11 வது இடத்தில் இருந்து ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. பத்தாண்டுகளுக்கு முன்பு 45,000 கோடியில் இருந்த ரயில்வே நிதிநிலை அறிக்கை இன்று 2.5 லட்சம் கோடியாக அதிகரித்து இருக்கிறது.  தற்போது ஊழல் இல்லாததால் ஒதுக்கப்பட்ட நிதி அனைத்தும் இரட்டை ரயில் பாதைகள் மற்றும் புதிய ரயில் பாதைகள் அமைக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. ரயில் பாதைகளையே கண்டிராத ஜம்மு காஷ்மீர் பகுதிகள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் புதிய ரயில் பாதைகள் அமைக்கப்பட்டு ரயில் போக்குவரத்து துவங்கியுள்ளது. மக்களின் வரி பணம் முழுமையாக திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் 50 சதவீத சலுகை கட்டணத்தில் பயணிகள் ரயில்களில் பயணிக்க முடிகிறது என்றார். வங்கிகளில் செலுத்தப்படும் பணத்திற்கு  வட்டி வருவது போல புதிய திட்டங்களில் முதலீடு செய்யப்படும் நிதி வேலைவாய்ப்பை தருவதோடு மட்டுமல்லாமல் அரசுக்கு லாபத்தையும் தருகிறது. "ஒரு நிலையம் - ஒரு தயாரிப்பு" என்ற திட்டத்தின் கீழ் ரயில் நிலையங்களில் உள்ளூர் பிரபல பொருட்கள் விற்பனை செய்யப்படுவதால் குறு விவசாயிகள், கைவினைஞர்கள், விஸ்வகர்மா நண்பர்கள் பெருமளவில் பயனடைந்திருக்கிறார்கள். இந்திய ரயில்வே பயணிகளுக்கானது மட்டுமல்ல, விவசாய தொழில் வளர்ச்சிக்கான பெரிய போக்குவரத்து நிறுவனம் ஆகும். வேகமான ரயில் போக்குவரத்து கால நேரத்தை சேமிக்கிறது. தொழிற் செலவினங்களையும் குறைக்கிறது. இந்தியாவில் நவீன கட்டமைப்பு வசதிகள் இருப்பதால் உலக அளவில் முதலீடுகளுக்கு ஏற்ற இடமாக அமைந்துள்ளது என மகிழ்ச்சி தெரிவித்தார். அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான ரயில் நிலையங்கள் நவீன மயமாக்கப்படும் போது இந்திய ரயில்வேயில் பெரிய கட்டமைப்பு உருவாகி அதிக அளவிலான முதலீடுகளை ஈர்க்கும் என்பதில் ஐயமில்லை என்றார்.